உள்ளாட்சி பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பாலகிருஷ்ணன்
உள்ளாட்சி பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பாலகிருஷ்ணன்
ADDED : செப் 24, 2024 09:59 PM
சென்னை:உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கி வரும், 10 சதவீத நிதியை, 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாய்-சேய் நல மையங்களில், 24 மணி நேரமும் மருத்துவர்கள் இல்லாத குறை இருக்கிறது. அதை தமிழக அரசு உடனடியாக சரி செய்து, மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் தூய்மை பணியாளர்களை வேறு பணிக்கு அனுப்பி விட்டு, துாய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுத்து வருகின்றனர். அதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
மக்களை வெகுவாக பாதிக்கும் சொத்து வரி, தொழில் உரிமக் கட்டணம், கட்டிட அனுமதி கட்டணம், அபராதம் வசூலித்தல் போன்ற வரிகளுக்கு கடுமையான அளவில் கட்டண உயர்வு அறிவித்து, அதை செயல்படுத்துகின்றனர். இதனால், பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால், கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் இன பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள் ஆகியோர் முழு சுதந்திரத்துடன் செயல்படும் சூழலை தற்போது இல்லை. அவர்கள் அச்சமின்றி பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு, 29 வகையான அதிகாரங்களும், நகர் புறத்திற்கு, 18 வகையான அதிகாரங்களும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.