ADDED : டிச 11, 2024 12:06 AM
உள்ளாட்சி அமைப்புகளில், 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தொழில், வர்த்தகம், வேலை மீது உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூலிக்க, அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையில் இருக்கும் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அரை ஆண்டு அடிப்படையில் தொழில் வரியை, பணியாளர்களிடம் பிடித்தம் செய்து, உள்ளாட்சி அமைப்பிடம் செலுத்த வேண்டும்.
அதன்படி, அரசு போக்குவரத்து கழக பணியாளர்களிடம், தொழில் வரி பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இத்தொகை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரவில்லை. 7.04 கோடி ரூபாய் அரசு போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, உள்ளாட்சிகளுக்கு வந்திருக்க வேண்டும்.
இத்தொகைக்கு, மாதம் ஒரு சதவீத வட்டி கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.
'துாய்மை இந்தியா' திட்டத்தில் உள்ளாட்சிகளுக்கு, 'பேட்டரி' வாகனங்கள் வாங்கப்பட்டன. இதில், 524 வாகனங்களின் விலை மீது, 7 சதவீத ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன் உள்ளாட்சிகளுக்கு கிடைக்கவில்லை.
வாகனங்களை வழங்கிய நிறுவனங்களுக்கு, 57.76 லட்சம் ரூபாய் கூடுதல் பலன் கிடைத்து உள்ளது.