sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளூர் கோவில்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் வேண்டுகோள்

/

உள்ளூர் கோவில்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் வேண்டுகோள்

உள்ளூர் கோவில்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் வேண்டுகோள்

உள்ளூர் கோவில்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் வேண்டுகோள்


UPDATED : ஜன 12, 2026 07:53 AM

ADDED : ஜன 12, 2026 04:57 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 07:53 AM ADDED : ஜன 12, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'பெரிய கோவில்களைப் போலவே, உள்ளூர் கோவில்களும் முக்கியமானவை. அவற்றைப் புனரமைத்து, தினம்தோறும் ஆன்மிக செயல்பாடுகளைத் தொடர வேண்டும்' என, கோவையில் நடந்த திருக்கோயில் தெய்வீக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருக்கோயில் தெய்வீகப் பேரவை சார்பில், திருக்கோயில் தெய்வீக மாநாடு கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.

கலாசாரம் காப்போம்

முன்னாள் கவர்னர் சண்முகநாதன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசுகையில், “கோவில்கள் மன்னர்களாலும் துறவிகளாலும் கட்டியெழுப்பப்பட்டவை. கலை, கலாசாரம், ஆன்மிகம் இந்த ஞானப்பொக்கிஷங்களின் பெருமையை நாம் வெறும் கதையாகப் பேசுவதோடு நின்றுவிடுகிறோம். அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சிதிலமடைந்து கிடக்கும் கிராமத்துக் கோவில்களை சீர்படுத்த வேண்டும். புதிய குடியிருப்புகளில், கோவில்களை கட்ட வேண்டும். கிராமம் தோறும் 10 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி, கோவில்களில் சந்தித்து, உழவாரப் பணி முதலியவற்றை செய்ய வேண்டும்” என்றார்.

கோவில்களை தத்தெடுப்போம்

கற்பகம் கல்வி மற்றும் தொழில் குழுமத்தின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்து பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 43 ஆயிரத்து 600 கோவில்கள் உள்ளன. பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட பெரும் கோவில்களில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்; கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது. 38 ஆயிரம் கோவில்கள் உரிய பராமரிப்பு இன்றி பொலிவிழந்துள்ளன.

இவை தவிர, கணக்கில் வராத கோவில்கள், 60 ஆயிரம் உள்ளன. இவற்றில் கிராமங்களில் 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. பெரிய பெரிய கோவில்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

நமக்கு அருகிலுள்ள சிறு, சிறு கோவில்களுக்குச் சென்று வழிபட்டு, அவற்றை மீட்டெடுக்கலாம். அவற்றை நாம் தத்தெடுக்க வேண்டும். கிராமங்களில் 50 பேர் கொண்ட சிறு, சிறு குழுவினர் இணைந்து மாதம் தலா ரூ. 100 கொடுத்தாலே, கோவிலை பராமரிக்க முடியும்.

புனரமைக்க வேண்டும்

ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பிரசார் பிரமுக் சுனில் அம்பேகர் பேசியதாவது: ஹிந்து தர்மம் எப்போது தோன்றியது என கணக்கிடமுடியாத காலத்தைக் கொண்டது. எந்தவொரு அரசியல் சித்தாந்தமோ, முயற்சியோ ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுவதை தடை செய்துவிட முடியாது. இந்த மண்ணையும் தர்மத்தையும் அழிக்க, பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் நடந்தன. எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. தமிழும், தமிழ்நாடும் பாரம்பரியம் மிக்க பக்தி இலக்கியத்தைக் கொண்டிருக்கின்றன. திருக்குறள், சங்க இலக்கியங்கள் என, தர்மத்தைப் பற்றியே பேசுகின்றன.

ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் வழிகாட்டி. எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பது என்பதே ஹிந்து தர்மமாக இருக்கும்போது, பிறப்பு மற்றும் ஜாதி அடிப்படையில் வேறுபாட்டைப் பார்ப்பது என்பது ஹிந்து சமூகத்தில் இல்லை. சாஸ்திரங்களிலும் இல்லை. இடையில் புகுத்தப்பட்டதை, திரித்துக் கூறுகின்றனர். கலாசார, மரபு பற்றிய புரிதல்களை சமூகத்திடம் பரப்ப வேண்டும். நம் எதிரிகள், கோவில்களை அழித்துத் தாக்கினர். நிலைமை மாறிவிட்டது.

நாம் அவற்றைப் புனரமைத்து வருகிறோம். அயோத்தியோ, ராமேஸ்வரமோ, நமது புண்ணிய தலங்கள் இருப்பினும், அனைத்துப் பகுதிகளிலும் நல்ல கோவில்கள், செயல்படுகின்ற கோவில்கள் இருக்க வேண்டும். பெரிய கோவில்களைப் போலவே, உள்ளூர் கோவில்களும் முக்கியமானவை. அவற்றைப் புனரமைத்து, தினம்தோறும் ஆன்மிக செயல்பாடுகளைத் தொடர வேண்டும்.

மரபு காக்க வேண்டும்

தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வல்லரசுகள் கூட, யோகாவை நம்மிடம் இருந்து கற்று பின்பற்றுகின்றன. நமது மரபுகளில் கவனம் செலுத்த வேண்டும். பிரக்யாராஜில் லட்சக்கணக்கான மக்கள் மொழி, எல்லை கடந்து ஒன்று கூடினர்.

நம்மைப் பிரிக்கவும், எதிர்மறையான கருத்தை விதைக்கவும் ஏராளமானவை காத்திருக்கின்றன.ஆனால், இந்த 21ம் நூற்றாண்டிலும், வரப்போகும் ஆண்டுகளிலும் நமது தர்மம்தான் நம்மை ஒன்றிணைக்க முடியும். ஹிந்து தர்மம் என்பது கோட்பாடோ, வரலாறோ, எழுத்துகளோ அல்ல. அது வாழ்வியல் முறை.

நாம் நமது அனைத்து மரபுகளையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நமது விழாக்களைக் கொண்டாட வேண்டும். புதிய தலைமுறையின் இணைய யுகத்தில் உள்ளோம். ரிஷிகள் எவ்வாறு, சுவடிகளில் ஞானத்தைப் பதிந்து வைத்தனரோ, நாமும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி அவற்றை டிஜிட்டலாக பதிய வேண்டும். மும்பை ஐ.ஐ.டி.யில் ஏ.ஐ., வாயிலாக தியானம் பற்றிய தகவல்களை இணைக்கும் பணி நடக்கிறது. நமது ஒற்றுமையே பலம். தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக இருக்கலாம்.

ஆனால், ஒன்றாக இணைந்திருக்காவிட்டால், வீழ்ந்துவிடுவோம். கோவில்கள் சார்ந்து சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், நமது பிரதான நோக்கம் ஹிந்து தர்மம், ஹிந்து ஒற்றுமை இருந்தால், எல்லா வேறுபாடுகளையும் கடந்துவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மனிதராக இருப்போம்

சக்தி குழுமங்கள் தலைவர் மாணிக்கம் பேசுகையில், “உலகில் இப்போதுமதமாற்றம் பிரச்னை இல்லை. மதமே இல்லை என்பதுதான் பிரச்னை. இறை உண்டு, அருளுண்டு, கோட்பாடு உண்டு என இளம் தலைமுறைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். எல்லாப் பாகுபாடுகளையும் களைந்து அனைவரும் மனிதர்களாகவே இருப்போம் என்பதே இன்றைய தேவை,” என்றார்.

வாழும் கடவுள்களுக்கு சேவை செய்
பல காலங்களில் பல ரிஷிகள் இறைவனிடத்து எப்போதும் இருக்கும் ஆன்மிக உண்மைகளை வழிவழியாக வடித்துக் கொடுத்தவைதான் வேதங்கள். செவி வழியாக வந்த இவற்றை, வேத வியாசர், நான்கு வேதங்களாக தொகுத்தார். இந்த வேதங்கள், கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகளைக் கொண்டது. கர்ம காண்டம் நம் மனத்தைச் சுத்தப்படுத்தி, ஞானத்துக்கு தகுதிப்படுத்துகிறது. இந்த கர்ம காண்டத்தில்தான் யாக யக்ஞங்களைச் செய்யும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவற்றை நம்மால் பின்பற்ற முடியவில்லை. எனவேதான், விவேகானந்தர் இன்றைய காலகட்டத்துக்கேற்ப, ஏழைகளுக்கான சேவைதான் யாக யக்ஞம் என்றார். உண்மையான சொரூபத்தை உணர்வதுதான் வேதாந்தத்தின் சாரம். எந்த அளவுக்கு கோவில்களுக்குள் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழும் கடவுள்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார். இறைவனை கோவிலில் வழிபட்டால் பூஜை. வெளியில் வழிபட்டால் அது சேவை. - சுவாமி ஹரிவ்ரதானந்தா மகராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்


Image 1520821

கூடி இருத்தலே மகிழ்ச்சி
கூடி இருத்தலே மகிழ்ச்சி. பாகவத தர்மத்தின் மையப்புள்ளியே அதுதான். இறைவனுக்கு அஞ்சும் வழிமுறை அல்ல நம்முடையது. இறைவனை காதலால் சென்றடைவது, ஆராதிப்பது என்பதே நமது வழிமுறை. எனவேதான் ஆழ்வார்கள் வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து ஆராதித்தனர். வேத உபநிடதங்களை எளிமைப்படுத்தி ஆழ்வார்கள் எளிமைப்படுத்தினர். குருபக்தியே முக்கியம் என்றனர். கடவுள் அந்தர்யாமி. அனைத்திலும் இருக்கிறார். எளியோருக்காக அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில்களில் எழுந்தருளியிருக்கிறார். திவ்யதேசங்கள் 108. அவற்றில் 106ஐ நேரில் சென்று தரிசிக்கலாம். இவற்றில் 84 தமிழ்நாட்டில் உள்ளன. திருவரங்கம், திருவேங்கடம் என சில கோவில்களுக்கு மட்டுமே மக்கள் அதிகம் செல்கின்றனர். மற்ற கோவில்களுக்கும் சென்று தரிசித்து, அக்கோவில்களையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். இறைவன் அருள்பாலிக்க காத்திருக்கிறான். வயதல்ல, ஞானமே முக்கியம் என்பதைத்தான், 16 வயது நம்மாழ்வாருக்கு, 50 வயது மதுரகவி ஆழ்வார் சீடனாக வந்தது குறிக்கிறது. - ஜெயந்தி, சமய சொற்பொழிவாளர்


பழமை மாறா வழிபாடு தேவை
இந்த மண் ஆன்மிக மண். ஒவ்வொரு காலகட்டத்திலும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற அருளாளர்கள் காலம் காலமாக நம்மை அருள்வழிப்படுத்தியுள்ளனர். இம்மண்ணில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. திருவிளக்கே ஏற்றாத கோவில்கள் உள்ளன. 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே; பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே' என மாணிக்க வாசகர் பாடியதைப் போல, பழமை மாறாத வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேசமயம் காலமாற்றத்துக்கு ஏற்பவும் மாற வேண்டும். எல்லாம் மாறும் என்பதே தத்துவம். நம் வழிபாட்டு நெறிமுறைகள் மாறப்போவதில்லை. நம் திருக்கோவில்களைபாதுகாக்க வேண்டும். கோவில்களை பழமை மாறாமல் ஆயிரமாண்டுகளுக்கு முன் எப்படிக் கட்டினார்களோ அவ்வாறே புதுப்பித்து பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். அக்கோவில்களில் பழமை மாறாத வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். - ராமானந்த குமரகுருபர அடிகளார், சிரவை ஆதீனம், கோவை


சிவாலயங்களை மீட்டெடுப்போம்
தமிழகம் முழுக்க 40 ஆயிரம் கோவில்கள் உள்ளன என்றால், அமைப்புகள், சிறு சிறு குழுக்களாக இணைந்து அவற்றைத் தத்தெடுத்தால், அனைத்துக் கோவில்களிலும் விளக்கெரியும், திருமஞ்சனம், வழிபாடு நடக்கும். இது சாத்தியம்தான். இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான கோவில்களில் திருப்பணி செய்துகொண்டே இருக்கின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அவற்றில் சோம்நாதர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம், ராமர் கோவில் என புனரமைத்துள்ளோம். மதுராவில் கண்ணன் கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்படும். இடிக்கப்பட்ட பழுதுபட்ட கோவில்களை புதுப்பிக்க வேண்டும். நாமும் செய்ய வேண்டும், மக்களையும் ஈடுபடுத்த வேண்டும். உலகம் முழுக்க சிவாலயங்கள் இருந்தன.
வளைகுடா அருங்காட்சியகத்தில், சிவலிங்கம் உள்ளது. ரோம் அருங்காட்சியகத்திலும் சிவலிங்கங்கள் உள்ளன. அமெரிக்காவின் கொர்லோடா நதிக்கரையில் 5,000 ஆண்டுகளுக்கு முன் சிவவழிபாடு இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். தென் அமெரிக்காவில் மயன் கலாசாரம், மஞ்சள் நதிக்கரை நாகரிகத்தில், சிவனும் அம்மையும் இருக்கும் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸி.,யில் பழங்குடி மக்களிடம் சிவனின் பெயரைச் சூட்டும் வழக்கம் இருக்கிறது. உலகம் முழுக்க இழந்த கோவில்களை மீட்டெடுப்போம். - சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேரூராதீனம், கோவை


அரசு ஆதரவளிக்கணும்

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., அகிலபாரத பிரசார் பிரமுக் சுனில் அம்பேகர், “திருப்பரங்குன்றம் தீப பிரச்னையைப் பொறுத்தவரை, மக்கள் தங்களது கலாசார, மரபு, ஆன்மிக, தார்மீக கடமைகளைப் பின்பற்றுகின்றனர். இது எவ்வித இடையூறுமின்றி தொடர வேண்டும். மாநில அரசும் இந்நடைமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். மக்களின் மத சுதந்திரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.



விருது வழங்கி கவுரவிப்பு

மாநாட்டின் ஒரு பகுதியாக, உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல், தேர் வடித்தல் உள்ளிட்ட தெய்வீகப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேராசிரியர் ஞானபூபதி மொழி பெயர்த்த 'உபநிடதங்கள்', முன்னாள் கவர்னர் சண்முக நாதன் எழுதிய 'தெய்வீகத் தமிழும் வேத ஞானமும்' என்ற இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.








      Dinamalar
      Follow us