ADDED : ஏப் 15, 2024 05:00 PM

சென்னை: 'அதிமுக தொண்டர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பற்றி அறியாத பா.ஜ., சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து நம்மை சீண்டி வருகிறது' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து இ.பி.எஸ்., எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீங்கள் என்னை நம்பலாம்; உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. லோக்சபாவில் மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட கட்சி தொண்டர்களின் உழைப்பும், கவனமும் இந்த கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன. ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது.
அராஜகப் போக்கு
40 தொகுதிகளிலும் திமுக அரசின் அராஜகப் போக்கும், அக்கிரமச் செயல்களும் மெல்ல, மெல்ல தலை தூக்கத் துவங்கிவிட்டன. தங்களுக்கு ஆதரவாக சில தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களையும் வைத்துக்கொண்டு நமது இயக்கத்திற்கு எதிராக வகை வகையான பொய்களையும், அவதூறுகளையும் பரப்பத் துவங்கிவிட்டார்கள்.
பா.ஜ., தேசியக் கட்சியாக இருந்தாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி நம்மைப் பற்றி பொய் பிரசாரம் செய்வதையே தங்களின் முழு நேர தேர்தல் பிரசாரமாக்கிக் கொண்டிருக்கிறது. நமது இயக்கத்தை பிளவுபடுத்த அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம்.
உழைப்பு, அர்ப்பணிப்பு
அதிமுக தொண்டர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பற்றி அறியாத பா.ஜ., சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து நம்மை சீண்டி வருகிறது. அதிமுக.,வை உடைக்க முயன்றது பா.ஜ.,. நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே.
கருத்துக் கணிப்பு
சில ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கும் மத்திய, மாநில ஆளும் கட்சிகள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒரு கருத்துத் திணிப்பை தேர்தலுக்கு தேர்தல் நடத்திக்கொண்டு இருப்பதையும் பார்க்கிறோம். இந்த கருத்துக் கணிப்புகள் அவர்களின் கற்பனை என்பதையும், கள நிலவரத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதையும் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு காட்டியுள்ளன.
'இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளியுங்கள்
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 'இரட்டை இலை' சின்னத்திலும், கூட்டணிக் கட்சியான தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 'முரசு' சின்னத்திலும் ஓட்டளிக்க வேண்டும். வெற்றி நமதே! 40ம் நமதே! நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

