அதிகார ஆணவத்தில் மிதக்கும் திமுக: பிரதமர் மோடி ஆவேசம்
அதிகார ஆணவத்தில் மிதக்கும் திமுக: பிரதமர் மோடி ஆவேசம்
UPDATED : ஏப் 10, 2024 03:17 PM
ADDED : ஏப் 10, 2024 03:15 PM

கோவை: ''திமுக அதிகார ஆணவத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது'' என பிரதமர் மோடி பேசினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: மேட்டுப்பாளையத்தில் கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் இருக்கின்றது. இத்தனை அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதிக்கு வருவது ஒரு டீக்கடைக்காரரான எனக்கு சந்தோஷமாக உள்ளது.
இந்த பகுதி எப்போதும் பா.ஜ.,வுக்கு சிறப்பு வாய்ந்தது. வாஜ்பாய் காலத்திலேயே இந்த தொகுதியில் இருந்து பா.ஜ., எம்.பி.,யை தேர்ந்தெடுத்தீர்கள். நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பா.ஜ.,விற்கு ஆதரவான அலை வீசுகிறது.
வறுமை ஒழிப்பு
திமுக.,வை வீட்டுக்கு அனுப்பும் உத்வேகம் பா.ஜ., கூட்டணியிடம் மட்டுமே இருக்கிறது. திமுக, காங்கிரஸ் ஆகிய குடும்ப கட்சிகள் பொய் சொல்லி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கின்றன. அவர்கள் வறுமையை ஒழிப்போம் எனக் கூறி வந்தாலும் இத்தனை ஆண்டுகளாக அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆனால் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.
இந்த குடும்ப கட்சிகள் எப்போதும் தங்கள் வாரிசுகளை மட்டுமே பதவியில் அமர வைக்கும். ஆனால், பா.ஜ., அரசு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தது. அதற்கும் குடும்ப கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வளர்ந்த பாரதத்தை அடைவதற்கு வளர்ந்த தமிழகம் அவசியம். ஒவ்வொரு மாநிலமும் உயர்ந்தால் தான் மொத்த தேசமும் உயரும். அதனால் தான் தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடிகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.
பிரிவினை
காங்கிரசின் இண்டியா கூட்டணி பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. தமிழகத்திலும் திமுக அதே விளையாட்டை தொடர்கிறது. திமுக எப்போதும் வெறுப்பு அரசியலையே செய்கிறது. அவர்களின் கவனம் தமிழகத்தின் வளர்ச்சியின்மீது இருந்ததில்லை.
நாங்கள் 3வது முறையாக ஆட்சி அமைக்கும்போது கொங்கு மண்டலம் மற்றும் நீலகிரியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமாக செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன். கோவையில் குண்டு வெடிப்பின்போது பயங்கரவாதிகளை தண்டிக்காமல், காப்பாற்றும் வேலைகளை திமுக செய்கிறது.

சுரண்டல், ஊழலுக்கு இன்னொரு பெயர் தான் திமுக. 2ஜி.,யில் ஊழல் செய்து நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்களை அகற்றுவோம், ஊழல்வாதிகளை தண்டிப்போம் என நாங்கள் சொல்கிறோம்; ஆனால் அவர்கள் ஊழல்களை ஆதரிப்போம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்கின்றனர்.
இந்தியாவின் உயிரோட்டமான கச்சத்தீவு பகுதியை திமுக.,.வும் காங்கிரசும் எப்படி தாரை வார்த்தனர் என்பது பற்றிய அரசு ஆவணங்கள் வெளியாகின. இண்டியா கூட்டணியினர் இந்தியாவை சேதப்படுத்தியதற்கான விலையை தமிழக மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த பாவத்திற்காக ஏப்.,19ல் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
ஆணவம்
திமுக அதிகார ஆணவத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது. அண்ணாமலையை யார் எனக் கேட்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு இளைஞன் நேர்மையான அரசியல் செய்ய வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த தேர்தல் மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய தேர்தல் என திமுக.,வின் ஒரு தலைவர் பேசுகிறார். ஆனால் இந்த தேர்தல், ஊழலை இந்தியாவை விட்டு அகற்றும் தேர்தல், குடும்ப அரசியலை வெளியேற்றும் தேர்தல், போதைப்பொருளை வெளியேற்றும் தேர்தல், திமுக பாதுகாத்துவரும் தேசியத்திற்கு எதிரான கொள்கை விரோத போக்கை வெளியேற்றும் தேர்தல்.
அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ., வேட்பாளர்கள் வென்றால் உங்கள் குரலை என்னிடம் நேரடியாக கொண்டுவந்து சேர்ப்பார்கள். இவர்களின் வெற்றி, தமிழக வளர்ச்சிக்கான புதிய பாதையை திறக்கப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

