"ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதியில்லை": எல்.முருகன் சாடல்
"ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதியில்லை": எல்.முருகன் சாடல்
ADDED : மார் 18, 2024 12:43 PM

கோவை: 'ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்கள்' என கோவையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இது குறித்து எல்.முருகன் கூறியிருப்பதாவது: பிரதமரின் தமிழக வருகை பா.ஜ.,வை வலுப்படுத்துவதோடு, பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேசத்திற்கு எதிரானவர்கள். தேசிய வளங்களை கொள்ளை அடித்து ஊழல் செய்யும் கட்சிகள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மிகப்பெரும் ஊழலை தி.மு.க.,வின் ஆ.ராசா செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை பிரதமர் வழங்கி வருகிறார்.
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் ஆதரவு இருப்பதை காண முடிகிறது. தி.மு.க., அவர்களின் அமைப்புகளை ஏவி விட்டு தான் தேர்தல் பத்திரங்களை பெற்றனரா?.
ஊழல் குறித்து பேசுவதற்கு தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்கள். நீலகிரி தொகுதியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். லோக்சபா தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை கூறினால் அதன்படி செயல்படுவேன். கோவை பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., கோவையில் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

