தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதி இலக்கு: ம.பி., முன்னாள் முதல்வர்
தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதி இலக்கு: ம.பி., முன்னாள் முதல்வர்
ADDED : ஜன 25, 2024 05:12 AM

மதுரை : 'லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறது'' என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கேற்ப 5515 ஓட்டுச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை தொகுதியின் எம்.பி.,யான வெங்கடேசன் செயல்பாடுள்ளவராகவோ, திறமையானவராகவோ இல்லை.
பிரதமர் மோடி தமிழ், தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறார். ஐ.நா., சபையில் தமிழின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். பார்லிமென்டில் தமிழகத்தின் செங்கோலை நிறுவியது, ஜி 20 மாநாட்டில் தமிழக கலாசாரத்திற்கான முக்கியத்துவம் கொடுத்தது என செயல்படுகிறார். எனவே இங்குள்ளோரைவிட நாங்களே தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் பற்றுள்ளவர்களாக இருக்கிறோம்.
தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவுமே கொடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்திற்கென ரூ.2.47 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்தபோது ரூ.95 ஆயிரம் கோடிதான் வழங்கினர். பா.ஜ., ஆட்சியில்தான் தமிழகத்தில் 62 லட்சம் வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 56 லட்சம் விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளை பா.ஜ., ஒரே துாரத்தில் வைத்துப் பார்த்தே செயல்படுகிறது. இண்டியா கூட்டணியில் பெரிய ஊழல் கட்சி தி.மு.க.,தான். அக்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர் ஜெயிலில் உள்ளார். மற்றொருவர் பெயிலில் உள்ளார். இவர்களைப் போலவே அனைவரும் ஊழல் செய்தவர்களாகவே உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அது எந்த மாநிலத்திலும், இந்தியாவிலும், ஏன் உலகத்திலுமே இல்லை. எனவே அவர்களைப் பற்றி பேச ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.