sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ வெற்றி!

/

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ வெற்றி!

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ வெற்றி!

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ வெற்றி!

31


UPDATED : ஏப் 10, 2024 09:05 AM

ADDED : ஏப் 10, 2024 12:02 AM

Google News

UPDATED : ஏப் 10, 2024 09:05 AM ADDED : ஏப் 10, 2024 12:02 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற, 'ரோடு ஷோ ' மிக வெற்றிகரமாக நடந்தது, பா.ஜ., கூட்டணி கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி, இளம் தலைமுறையினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, வழிநெடுகிலும் மலர் துாவி, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

லோக்சபா தேர்தலில் இம்முறை, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பது, பா.ஜ.,வின் இலக்காக உள்ளது. அதிலும், தமிழகத்தில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பது, பா.ஜ., தலைவர்களின் லட்சியம்.

அதற்காக பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கட்சி, 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மூன்று தொகுதிகளில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்பதற்காக, மக்களிடம் பிரபலமானவர்களை, முக்கிய தொகுதி களின் வேட்பாளர்களாக பா.ஜ., தலைமை களம் இறக்கி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன், பல்வேறு இடங்களில் பா.ஜ., தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அவற்றில், பிரதமர் மோடி பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், பா.ஜ., சார்பில் முக்கிய நகரங்களில், 'ரோடுஷோ' நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஏற்கனவே கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று ரோடு ஷோ நடந்தது.

வரவேற்பு


இதில், பங்கேற்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் கோண்டியா விமான நிலையத்திலிருந்து, தனி விமானத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை, 5:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த பிரதமரை, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். மாலை, 6:05 மணிக்கு, அவரது வாகனம் விமான நிலையத்திலிருந்து, தி.நகர் பாண்டி பஜாரை நோக்கி புறப்பட்டது. அவரது வாகனத்தின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

மகிழ்ச்சி


சாலையின் இரு புறங்களிலும் நின்ற மக்களை பார்த்து, பிரதமர் கை அசைத்தபடி வந்தார். மத்திய பா.ஜ., அரசு அறிமுகப்படுத்திய, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சாலை அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்ட பாண்டி பஜாரில் ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாண்டி பஜார் வந்த பிரதமருக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வரும் முன், ஒலிப்பெருக்கியில் நாதஸ்வர இசை ஒலிபரப்பப்பட்டது. பாண்டி பஜார் வந்ததும், காரிலிருந்து இறங்கிய பிரதமர், தென்சென்னை பா.ஜ., வேட்பாளரான, முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளிடம் நலம் விசாரித்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி புறப்பட்டார். வாகனத்தில் அண்ணாமலை மற்றும் சென்னை வேட்பாளர்கள் உடன் சென்றனர். சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்ற, பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து, தாமரை சின்னத்தை காண்பித்தபடி, பிரதமர் மக்களின் வரவேற்பை ஏற்றார். கல்லுாரி பெண்களும், இளைஞர்களும் ஏராளமாகத் திரண்டு உற்சாகமாக கையசைத்து, மகிழ்ச்சியில் கோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.

வழியில், கடவுள் வேடமிட்ட கலைஞர்கள் வரவேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. பலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அந்த குழந்தைகளும் பிரதமர் மோடியை பார்த்ததும், கையசைத்து தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தின.

பெண்கள், மோடி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை பிடித்தபடி நடனமாடினர். பேரணி நடந்த பாண்டி பஜார் வீதி முழுதும் பா.ஜ., கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான இளம் தலைமுறையினர், 'நாங்கள் மோடியின் குடும்பம்' என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி நின்றனர். 'மீண்டும் மோடி; வேண்டும் மோடி, பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வாகனத்தில் வந்த பிரதமர் மீது, சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை துாவி வரவேற்றனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.

பிரசாரம்


'தாமரை சின்னத்தில் ஓட்டளிப்போம்; தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம்' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. சிலர் அலங்கார குடைகளுடன் வரவேற்பு அளித்தனர். இரவு 7:10 மணிக்கு ரோடு ஷோ நிறைவடைந்தது. மொத்தம், 1.5 கி.மீ., துாரம் நடந்தது.

வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். வேட்பாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சில நிமிடங்கள் அண்ணாமலையுடன் உரையாடினார்.

அதன்பின் பிரதமர் மோடி, இரவு, 7:35 மணிக்கு காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை கவர்னர் ரவி வரவேற்றார்; இரவு, கவர்னர் மாளிகையில் பிரதமர் ஓய்வெடுத்தார்.

இன்று காலை, 9:00 மணிக்கு காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர், 9:20 மணிக்கு பழைய விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் வேலுார் செல்கிறார். அங்கு காலை, 10:15 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

கூட்டம் முடிந்து காலை, 11:15 மணிக்கு வேலுாரில் இருந்து ஹெலிகாப்டரில் அரக்கோணம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில், மதியம், 12:50 மணிக்கு கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பின், தனி ஹெலிகாப்டரில் மதியம் 1:20 மணிக்கு, கோவை மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதியம், 2:20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து மாலை, 5:00 மணிக்கு விமானத்தில் மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் விமான நிலையம் செல்கிறார். இதையொட்டி, பிரதமர் செல்லும் பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ரோடு ஷோ வெற்றிகரமாக நடந்து முடிந்தது, பா.ஜ.,வினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துாவிய மலர்களை சேகரித்த மக்கள்


* பிரதமர் மோடியை காண, பாண்டிபஜாரில் மாலை, 3:00 மணி முதல் தொண்டர்கள் குவியத் துவங்கினர்
* தண்ணீர் பாட்டில் கொண்டு வர அனுமதி இல்லாததால், சாலையின் இருபுறமும் குழாயுடன் கூடிய குடிநீர் கேன்களும், காகித டம்ளரும் வைக்கப்பட்டிருந்தன
* சாலையின் இருபுறமும் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டிய நிகழ்ச்சி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன
* பாண்டிபஜாரில் சாலையின் இருபுறமும் உள்ள ஜவுளி, நகைக்கடை கட்டடங்களின்மேல் நின்றபடி, பொது மக்கள், பிரதமர் மோடியை பார்த்து கை அசைத்தனர்; அதற்கு மேல் உள்ள தளங்களில், போலீசார் நின்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்
* சாலையின் இருபுறமும் மரங்கள், கட்டடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
* பிரதமர் மோடி தன் கையில் எல்.இ.டி., விளக்கிலான தாமரை சின்னத்தை வைத்திருந்தார்* கூட்டணி கட்சிகளான பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு இயக்கம், த.மா.கா., ஆகிய கட்சிகளின் தொண்டர்களும் அதிகம் பங்கேற்றனர்
* பிரதமர் வருகை குறித்து அறிவித்தபடி இருந்த பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'இந்த சாலை பிரதமரின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இதனால், கீழே போட்ட பொருட்களை தாங்களே அப்புறப்படுத்தி, துாய்மை படுத்த வேண்டும்' என, அறிவித்தபடி இருந்தார். அதை பின்பற்றி மக்களும், பிரதமர் மோடி சென்றதும், சாலையில் இருந்த குப்பைகளை சேகரித்து, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.



போலீஸ் கெடுபிடியையும் தாண்டி மோடியை காண குவிந்த கூட்டம் '

பிரதமர் வருகையால், எந்த இடையூறும் இருக்காது; கடைகளை வழக்கம் போல திறந்து வியாபாரம் செய்யலாம்' என, பா.ஜ., நிர்வாகிகள், பாண்டிபஜாரில் உள்ள கடை உரிமையாளர்களிடம் கூறினர். ஆனால், போலீசார் கடைகளை மூடுமாறு கெடுபிடி காட்டியதால், பல கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல, நேற்று மதியம் முதல் பாண்டிபஜார் செல்லும் சாலைக்குள், வாகனங்களை மட்டுமின்றி, பொது மக்கள் நடந்து செல்லக்கூட, மாநில போலீசார் அனுமதிக்கவில்லை. சிறு தெருக்கள் வழியாக மக்கள் வரவும் தடை போட்டனர். இதனால், பிரதமர் மோடியின் ரோடுஷோ நிகழ்வில் பங்கேற்க ஆர்வமாக இருந்த மக்களும் பங்கேற்க முடியாத நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், போலீசாரின் தடையையும் மீறி, பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்; இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் குவிந்தனர். சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் இருந்தும், மதியத்தில் இருந்தே மக்கள் வந்திருந்தது, பிரதமர் மோடியின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வைத்திருந்த கொடி, பேனர்களையும், போலீசார் அப்புறப்படுத்தியதாக, பா.ஜ.,வினர் புகார் தெரிவித்தனர்.



Image 1255524


பேனர்கள் அகற்றம்: பா.ஜ., வேட்பாளர் கண்டனம்


பிரதமரை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை அகற்றும் படத்தை, மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தள்ளார். பதிவில், அவர் கூறியிருப்பதாவது: தி.மு.க.,வின் பயத்திற்கு இந்த படமே உதாரணம். அவர்கள், தங்களால் முடிந்த அளவு, மாநில அரசு துறைகளை பயன்படுத்தி, எங்களின் முயற்சிகளை வீணடிக்கின்றனர். பிரதமர் ரோடு ஷோக்காக நாங்கள் எடுத்த முயற்சிகளை, கோழைத்தனமாக முடக்க முயற்சித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களிடம் இருந்து சிறந்த மோதலை எதிர்பார்க்கிறோம். எனவே, தேர்தல் களத்திற்கு வாருங்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதி பெற்றதாக பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது; ஆனால், பேனர்கள் வைக்க அனுமதியில்லை; அதனால், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினோம் என, மாநகராட்சி ஊழியர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us