தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை!
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை!
UPDATED : ஜன 14, 2024 02:47 AM
ADDED : ஜன 12, 2024 11:40 PM

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை என, மறுக்கப்பட்டு உள்ளது. அதிக 'டிமாண்ட்' வைக்கப்பட்டதால், கூட்டணி கதவு மூடப்பட்டதாக, அறிவாலய வட்டாரத்தில் காரணம் சொல்லப்படுகிறது.
சட்டசபையில் 29 எம்.எல்.ஏ.,க்கள், 7.9 சதவீத ஓட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்து என, 2011ல் உச்சத்தில் இருந்த தே.மு.தி.க., அதற்கு பிந்தைய தேர்தல்களில் தொடர் சரிவை சந்திக்கத் துவங்கியது. சுயபலத்தை அறியாமல், அக்கட்சி தலைவர்களால் வைக்கப்பட்ட டிமாண்ட் தான் அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
நீடிக்கவில்லை
தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருந்த விஜயகாந்த், தனிக் கட்சி துவங்கி, தனித்து சந்தித்த 2006ம் ஆண்டு தேர்தலில், 8.4 சதவீத ஓட்டுகளை பெற்று, திராவிடக் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தார்.
அடுத்த மூன்றாண்டுகளில் தமிழகம் சந்தித்த லோக்சபா தேர்தலிலும் தனித்து களமிறங்கி, 10.3 சதவீத ஓட்டுகளை அள்ளி, அரசியல் சக்தியாக வடிவெடுத்தார். அவரது வளர்ச்சியை, அடுத்து வந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, தி.மு.க.,வை வீழ்த்தி, எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்த விஜயகாந்துக்கு, கூட்டணி உறவு ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை.
ஆளும் கட்சியை எதிர்த்து நின்றதன் பலனை, சில மாதங்களிலேயே சந்திக்கத் துவங்கினார். தே.மு.தி.க., பிளவுபட்டது; சில எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்தனர்.
அடுத்து வந்த, 2014 லோக்சபா தேர்தலில், 5.1 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் 2.4 சதவீதம் என அக்கட்சியின் பலம் இறங்குமுகத்தில் வேகமாக சென்றது. அதிலிருந்து மீள, மீண்டும் அ.தி.மு.க., அணியில் இடம்பெற, 2021 தேர்தலில் தே.மு.தி.க., முயற்சி எடுத்தது.
அதிக டிமாண்ட் காரணமாக, அ.தி.மு.க., கழற்றி விட்டதால், அ.ம.மு.க.,வுடன் அணி சேர்ந்து, 60 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. வெறும் 0.43 சதவீத ஓட்டுகளை தான் அக்கட்சியால் பெற முடிந்தது.
விஜயகாந்த் மறைவுக்கு முன் நடந்த, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இழந்த பலத்தை பெறப் போவதாக சொல்லி, தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட்டது. ஆனால், 1,115 ஓட்டுகளே கிடைத்தன.
ஆர்ப்பாட்டம்
நிலைமை இப்படி இருக்க, சமீபத்திய விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம், அக்கட்சிக்கு ஆறுதலை தேடித் தரும் வகையில் அமைந்தது.
அதையே ஆதாரமாக காட்டி, கூட்டணி பேச்சில் துணிச்சலுடன் இறங்கியிருக்கிறார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா.
சமீபத்தில், அ.தி.மு.க., தரப்புடன் பேசியபோது, பிரேமலதா வைத்த டிமாண்ட்களை கேட்டு, பேச வந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், வந்த வேகத்தில் திரும்பி விட்டதாக தகவல்.
இப்போது, தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஆளும் தரப்பில் ஒரு 'சீட்' தர ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் என மூன்று தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், பிரேமலதா தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலுார் தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தால், அதுவும் வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்ததாகஅறிவாலய வட்டாரம் சொல்கிறது.
இதெல்லாம் சரிவருமா என யோசித்த ஆளும் தி.மு.க., தரப்பு, 'கூட்டணி ஏற்கனவே நிரம்பி வழிகிறது. ஆனாலும் ஏதாவது ஒரு இடம் கொடுக்கலாம் என நினைத்தால், உங்கள் எதிர்பார்ப்பு எங்கேயோ நிற்கிறது; அந்தளவுக்கு இடமில்லை' என கூறி, கதவை மூடி விட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்தே, 'ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் ஏற்படுத்திய வசதிகளை அழிக்கும் ஆளும் தி.மு.க., அரசு' எனக் கூறி அக்கட்சியை எதிர்த்து, வரும் 20ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் பிரேமலதா என, அக்கட்சி வட்டாரம் கூறுகிறது.