UPDATED : பிப் 28, 2024 04:08 PM
ADDED : பிப் 27, 2024 11:56 PM

திருப்பூர் : ''நாட்டின் அரசியல் மாற்றத்தில் புதிய மையமாக தமிழகம் உருவாகிறது. லோக்சபா தேர்தலில், புதிய சரித்திரம் படைப்போம்,'' என, பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு விழா நேற்று திருப்பூரில் நடந்தது. ஹெலிபேடில் இருந்து திறந்த வாகனத்தில் வந்த மோடியை, இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் துாவி வரவேற்றனர்.குழந்தைகள், 'வெல்கம் டூ மோடி ஜி' என்ற வாசகம் தாங்கிய பதாகைகளை பிடித்திருந்தனர். தொண்டர்கள் பலர் தாமரை மலர்களுடன் வரவேற்றனர்.
மோடி பேசியதாவது: தமிழகத்தின் கொங்கு பகுதி, நாட்டின் வளர்ச்சி பாதையில் முக்கிய பங்காற்றுகிறது. இங்கு, ஜவுளித்தொழில் துடிப்பாக உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது, காவிக்கடலைப் பார்த்தது போல இருக்கிறது; தமிழகம் தேசியத்தின் பக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கை உறுதியாகிறது.தமிழகம், இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும். இங்கே அதிகம் பேசப்படும் கட்சியாக, பா.ஜ., மாறியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில், தமிழகம் புதிய மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. 2024 தேர்தலில் புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது. அதற்கு முன்னோடியாக, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை அமைந்திருக்கிறது.
வரலாற்றில், இதுவரை இல்லாத ஆதரவு, தமிழகத்தில் இந்த யாத்திரைக்கு கிடைத்திருக்கிறது. யாத்திரை நடத்திய அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தன் யாத்திரை வாயிலாக நாட்டின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை, வீடு வீடாக கொண்டு சேர்த்திருக்கிறார்.பண்பாட்டில் உயர்ந்ததுதமிழ் மொழி, பண்பாடு என் மனதிற்கு நெருக்கமானது; அதனால் தான் ஐ.நா., சபையில், தமிழ் கவிதை படித்தேன். என் தொகுதியில், காசி தமிழ் சங்கமம் நடத்தி முடித்துள்ளோம். பார்லிமென்டில் செங்கோல் நிறுவி, மரியாதை செய்தேன். தமிழகத்துடன் எனக்கு இருப்பது வெறும் அரசியல் உறவு அல்ல; என் இதயத்தில் பூத்த நேசம் அது; இது, பல ஆண்டு பந்தம்.தமிழகத்தில், பா.ஜ., ஆட்சியில் இருந்தது இல்லை.
ஆனாலும், என் இதயத்தில், தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இங்கே, பா.ஜ., வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை கொள்ளை அடிப்பவர்கள், பா.ஜ., வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனர்; நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள மக்களை திசை திருப்புகின்றனர். ஆனால், தமிழக மக்கள் அறிவாளிகள். ஊழல்களை அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
கொள்ளை கூட்டணி
'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள், தமிழகத்தின் வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள். கொள்ளையடித்து விடலாம் என்று நினைக்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய காங்., அரசு, பாதுகாப்பு சார்ந்த வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள். 'முத்ரா' கடன் திட்டம் வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.
காங்., ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமாகாது.டில்லியில், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்து விட்டது. தமிழகத்தில், கொள்ளை அடிக்க அந்த கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கொள்ளையடிக்கும் அந்த கூட்டணி கடையை பூட்ட வேண்டும்; அதற்கான பூட்டை, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை உருவாக்கி கொடுத்திருக்கிறது. தமிழக மக்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.
புரட்சி தலைவரை புகழ்ந்த மோடி
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர்., பிறந்த ஊரான இலங்கை கண்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள மக்களிடம் பேசினேன். நல்லாட்சி நடத்திய எம்.ஜி.ஆர்., தரமான கல்வி, சுகாதாரம் கொடுத்திருக்கிறார். பெண்கள், இளைஞர்கள் அவரை மதிக்கின்றனர்.
அவர் குடும்ப ஆட்சி நடத்தவில்லை; திறமையின் அடிப்படையில், கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தினார். அதனால் தான் இன்றும் எம்.ஜி.ஆர்., கொண்டாடப்படுகிறார். அவருக்கு பின், ஜெயலலிதா நல்லாட்சி கொடுத்தார். அவரை நான் நன்கறிவேன். சமீபத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு இந்த மண்ணில் இருந்து என் அஞ்சலி செலுத்துகிறேன். எம்.ஜி.ஆர்., கொள்கைகளை பின்பற்றி, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தார் ஜெயலலிதா.
மோடி உத்தரவாதம்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு, பா.ஜ., எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது. பத்தாண்டு கால காங்., - தி.மு.க., கூட்டணி அரசு கொடுத்ததை விட, மூன்று மடங்கு நிதி ஒதுக்கியுள்ளோம். அந்த கூட்டணியில் பெரிய பதவியில் இருந்தவர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்பதை, என்னால் உறுதியாக சொல்ல முடியும். அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கான மோடியின் உத்தரவாதம் பல ஆண்டுகளுக்கு தொடரும்.

