திமுக.,விடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன் பேட்டி
திமுக.,விடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன் பேட்டி
ADDED : பிப் 12, 2024 03:56 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் 3 தனித்தொகுதிகள், ஒரு பொது தொகுதி என மொத்தம் 4 இடங்களை ஒதுக்குமாறு திமுக.,விடம் கேட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக.,வின் குழுவிடம் வழங்கினோம். அதில் 3 தனி தொகுதிகள், ஒரு பொது தொகுதி என 4 இடங்களை ஒதுக்க வேண்டும் என கோரினோம். கொள்கை சார்ந்து இயங்க கூடியது இந்த கூட்டணி, 2010 முதல் தொடர்கிறது.
பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் 'இண்டியா' கூட்டணி இயங்கி வருகிறது. அதிமுக, பா.ஜ., கூட்டணி சிதறி கிடக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 7 தனித்தொகுதிகளில் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளையும், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 பொது தொகுதிகளையும் திமுக.,விடம் வழங்கியுள்ளோம். அதில் எந்தெந்த தொகுதிகளில் போட்டி மற்றும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி தொகுதி இறுதியான பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

