"பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க.,வின் கதவை சாத்திவிட்டோம்": ஜெயக்குமார் பதில்
"பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க.,வின் கதவை சாத்திவிட்டோம்": ஜெயக்குமார் பதில்
ADDED : பிப் 07, 2024 01:34 PM

சென்னை: ''அ.தி.மு.க.,வுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என அமித்ஷா கூறிய நிலையில், நாங்கள் கதவை சாத்திவிட்டோம்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து, தஞ்சாவூரில் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பா.ஜ., வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பா.ஜ.,வுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பா.ஜ., கூட்டணிக்கு வரக் கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். எங்கள் கட்சி நிலைப்பாடு பொருத்தவரை பா.ஜ., ஒரு காலத்தில் தோழமையாக இருந்தது. பொதுவாகவே எங்களுடைய முன்னோடிகளான எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநிலத் தலைவர் கடுமையான அளவுக்கு விமர்சனம் செய்தார்.
அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தபோதும் தொடர்ச்சியாக எங்களைச் சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். பா.ஜ.,வை கழட்டிவிட்ட பிறகு தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பா.ஜ.,வுடன் இப்போது மட்டுமல்லாமல், எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பது தான் அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அ.தி.மு.க., முன் வைத்த காலை பின் வைக்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

