ADDED : மார் 12, 2024 11:17 PM
சென்னை:சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 35, டில்லியில், மார்ச் 9ல் கைது செய்யப்பட்டார்.
அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஏழு நாள் காவலில் விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சென்னை மாவட்டம், மைய சென்னை மண்டல துணை செயலராக இருந்தார்.
மற்றொரு சகோதரர், அமீர் இயக்கத்தில், ஜாபர் சாதிக் தயாரித்து வரும், இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர்கள் மூவரும், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என, பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, முகமது சலீம், மைதீன் ஆகியோர் பக்கபலமாக இருந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, நேற்று, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் களமிறக்கும் ஏஜன்டாகவும், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் செயல்பட்டுஉள்ளனர்.

