ஆண்டவன் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம் வைத்து பூஜை
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம் வைத்து பூஜை
ADDED : டிச 09, 2024 04:03 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், காசி தீர்த்தம் வைத்து பூஜை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல், மகிழ்ச்சியை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும்.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்ராட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி முதல் மண்விளக்கு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை, சேரன்நகர், சேர்மராஜ்,40, என்ற பக்தரின் கனவில் காசி தீர்த்தம் வைக்க தோன்றியது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. சேர்மராஜ் கூறியதாவது, கடந்த எட்டு வருடங்களாக காசிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறேன், முருகன் கனவில் தோன்றி காசிதீர்த்தத்தை சிவன்மலை பெட்டியில் வை என சென்னார். காசி தீர்த்தம் கொண்டு வந்தேன் என்றார்.
இது பற்றி கோவில் சிவாச்சார்யார் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். காசி தீர்த்தம் வைத்துள்ளதால், நன்மை பெருகும் ஆன்மிகம் செழிக்கும். இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.