6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி: பெண் உட்பட 4 பேர் பலி; ஒருவர் படுகாயம்
6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி: பெண் உட்பட 4 பேர் பலி; ஒருவர் படுகாயம்
ADDED : டிச 17, 2025 05:50 AM

தொப்பூர்: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் அருகே ஆறு வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில், 4 பேர் பலியாகினர்; ஒருவர் படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், நடுக்காரப்பட்டியை சேர்ந்த டிரைவர் முனியப்பன், 46, மாற்று டிரைவரான நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த வீரன், 47, ஆகிய இருவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, லாரியில் கோழி தீவனத்தை ஏற்றிக்கொண்டு, தர்மபுரி வழியாக நாமக்கல் சென்று கொ ண்டிருந்தனர்.
இரு கார்கள் நேற்று காலை, 9:50 மணிக்கு தொப்பூர் கணவாய் அடுத்துள்ள, போலீஸ் குடியிருப்பு பகுதியை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற மூன்று கன்டெய்னர் லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில், பார்சல் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த, 'மாருதி, போர்டு' ஆகிய இரு கார்கள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், பார்சல் லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த பிரபாகரன், 42, மாற்று டிரைவரான பாலகிருஷ்ணன், 47, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.
அதே சமயம், பார்சல் லாரியின் அடியில் சிக்கி, போர்டு கார் நசுங்கியதில், அதிலிருந்த சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 30, இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
இந்நிலையில், கன்டெய்னர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி, முன்னால் சென்ற, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் மீதும் மோதி, சாலை மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஸ்கூட்டரில் சென்ற தர்மபுரி மாவட்டம், மாதேமங்கலம் அடுத்த குட்டூரை சேர்ந்த அருணகிரி, 38, அவரது அக்கா கலையரசி, 40, கோழித்தீவன லோடு லாரி டிரைவர் முனியப்பன், 46, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
கலெக்டர் ஆய்வு மூன்று கன்டெய்னர் லாரிகள் மற்றும் மாருதி காரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் படுகாயமடைந்த மாற்று லாரி டிரைவர் வீரனை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தர்மபுரி கலெக்டர் சதீஷ் சம்பவ இடத்தில், விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்தை தடுக்கும் வழிகள் குறித்தும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், சாலை பராமரிப்பு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விபத்து காரணமாக, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 4 மணி நேரம் போக்குவ ரத்து பாதிக்கப் பட்டது.

