மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : மே 12, 2026 02:46 AM
சென்னை: 'தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, புதிய அரசு பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில், 13 இடங்களில், நீர்வளத் துறை வாயிலாக மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, ஒப்பந்ததாரர்கள் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது. இதில், அமலாக்கத் துறை சோதனையை அடுத்து, மணல் குவாரிகள் மூடப்பட்டன.
இதன்பின், விழுப்புரம், கடலுார், திருச்சி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல் துறை அனுமதி கடந்த ஆண்டு பெறப்பட்டது.
இதில், லாரிகளில் மணல் ஏற்றும் ஒப்பந்ததாரராக யாரை நியமிப்பது என்பதில், அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதனால், தேர்தல் முடிந்த பின், மணல் குவாரிகள் திறப்பை பார்த்துக் கொள்ளலாம் என, அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் காரணமாக, மணல் குவாரிகள் திறக்கப்படாமல் முடங்கின. இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழக மணல் லாரி, எம் - சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:
வெளிப்படை தன்மையுடன், மணல் குவாரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகள் முடங்கியதால், 45,000 லாரி உரிமையாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
மணல் குவாரி விஷயத்தில், புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
