ADDED : டிச 02, 2025 05:06 AM
தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் சண்முகப்பா வேலுாரில் நேற்று கூறியதாவது:
லாரிகளுக்கான எப்.சி., கட்டணம் ஆண்டுக்கு, 850 ரூபாயாக இருந்தது; இதை, 33,000 ரூபாய் வரை உயர்த்தி, மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கட்டண உயர்வை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்துவதோ, நிறுத்துவதோ அவர்கள் முடிவு.
ஜார்க்கண்ட் அரசு கட்டண உயர்வை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டது. இதுபோல தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை, வரும் 9ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழக அரசு சாதகமான முடிவு எடுக்காவிட்டால், ரேஷன் அரிசி, பால் உட்பட அத்தியாவசிய சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள், டெல்டா பகுதிகளில் நெல் ஏற்றி செல்லும் லாரிகள் உட்பட அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

