கர்நாடகாவில் 2வது நாளாக லாரி ஸ்டிரைக் தினமும் ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு
கர்நாடகாவில் 2வது நாளாக லாரி ஸ்டிரைக் தினமும் ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு
UPDATED : ஏப் 17, 2025 04:01 AM
ADDED : ஏப் 17, 2025 12:57 AM

கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. அரசு பேச்சில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஒரு நாளைக்கு, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில், நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் இயக்கப்படவில்லை.
நேற்று முன்தினம், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்காரெட்டி ஆகியோரிடம், லாரி உரிமையாளர்கள் தனித்தனியாக பேச்சு நடத்தினர்.
இதில், மாநில எல்லையான அத்திப்பள்ளியிலுள்ள போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். உயர்த்திய டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, போக்குவரத்து சோதனை சாவடிகளால் ஆண்டுக்கு, 125 கோடி ரூபாய் வருவாய் வருவதால், சோதனைச்சாவடிகளை அகற்றிய மாநிலங்களுக்கு, கர்நாடகா மாநில அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் சோதனைச்சாவடிகளை அகற்ற முயற்சிப்பதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
ஆனால், 'டீசல் விலை உயர்வை குறைக்க முடியாது; சுங்கச்சாவடிகளை அகற்ற முடியாது' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அதனால் நேற்றும் தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால், 95 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிய லாரிகள் மட்டும் இரு மாநிலங்களுக்கு இடையே சென்று வந்தன.
தமிழக எல்லையில் நேற்று நிருபர்களை சந்தித்த, கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள், ஏஜன்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகப்பா கூறியதாவது:
இந்தியாவில், 14 மாநிலங்களில் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல், அத்திப்பள்ளி சோதனைச்சாவடியை அகற்ற வேண்டும்.
முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசியபோது, 'நான் மக்களை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறேன். 3,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது' என கூறி விட்டார்.
இலவசம் கொடுத்து விட்டு, லாரி உரிமையாளர்கள் தலையில் பாரத்தை சுமத்தாதீர். கர்நாடகாவில் லாரிகள் ஓடவில்லை. தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லாரிகள் வரவில்லை.
ஒவ்வொரு நாளும், 4,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கு லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். போராட்டம் தீவிரமாக இருக்கும். அண்டை மாநிலங்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.
நாசிக்கில் இருந்து, 100 லாரிகளில் வர வேண்டிய வெங்காயம் வரவில்லை. 400 லோடு பருப்பு மற்றும் 8,000 டன் கனிமங்கள் வரவில்லை. போராட்டம் தீவிரமானால் அரசு வெகுவாக பாதிக்கும்.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -