நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் 'டோல்' கட்டணத்தில் விலக்கு கேட்பு
நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் 'டோல்' கட்டணத்தில் விலக்கு கேட்பு
ADDED : ஜூன் 24, 2025 11:09 PM
சென்னை:அரசு பஸ்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்குமாறு, தேசிய நெடுஞ்சாலை துறையிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக இயக்கப்படும் 20,508 பஸ்களில், தினமும், 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் தேவை. டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு செலவு அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய் 39.3 கோடி ரூபாய்; செலவு 57.68 கோடி ரூபாய்; நஷ்டம், 18.65 கோடி ரூபாய். மாதம், 600 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து, அரசு பஸ்களுக்கு விலக்கு அளிக்குமாறு, அரசு போக்குவரத்து கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பஸ்களில் மக்கள் அதிகமாக பயணிக்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. 20,000க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதில், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் 8,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு, சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தப்படுகிறது.
இதனால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதம், 12 கோடி ரூபாய் செலவாகிறது.
பொதுமக்கள் சேவை நோக்கில், பெரிய அளவில் பயணியர் கட்டண உயர்வு இன்றி, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அரசு பஸ்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.