முறைகேடு வழக்கில் லாட்டரி மார்ட்டினுக்கு... சிக்கல்
முறைகேடு வழக்கில் லாட்டரி மார்ட்டினுக்கு... சிக்கல்
UPDATED : அக் 28, 2024 11:25 PM
ADDED : அக் 28, 2024 11:23 PM

சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது; வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னை நங்கநல்லுார் தில்லைகங்கா நகரில், நாகராஜன் என்பவரது வீட்டில், 2012 மார்ச்சில் சோதனை நடந்தது. அதில், 7.20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியது. கேரளா, மஹாராஷ்டிரா லாட்டரி சீட்டுகளை விற்றதன் வாயிலாக, அந்த பணம் வந்ததாக நாகராஜன் கூறினார்.
லாட்டரி சீட்டுகளை, தன் பங்குதாரர்களான மார்ட்டின், மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து வெளிமாநிலங்களில் அச்சிட்டதாகவும் தெரிவித்தார். மூன்று பேர் மீதும் மோசடி, சதி உள்ளிட்ட பிரிவுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமின் கேட்டு மார்ட்டின் மனு போட்டார். அதில், விற்பனை ஒப்பந்த பத்திரம் ஒன்றை இணைத்திருந்தார்.
அண்ணா நகரில், 12.30 கோடி ரூபாய்க்கு வீடு வாங்க, அட்வான்சாக 7.30 கோடியை மூர்த்தியிடம் தன் மனைவி லீமா ரோஸ் கொடுத்ததாகவும், அதுதான் நாகராஜன் வீட்டில் இருந்ததாகவும் மார்ட்டின் கூறினார்.
ஆனால், ஒப்பந்த பத்திர முத்திரைத்தாள் மார்ச் 13ல் தான் விற்கப்பட்டுள்ளது; ஒப்பந்தம் மார்ச் 2ல் கையெழுத்தாகி உள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மூர்த்தியும், லீமா ரோசும் ஆவணங்களை திருத்தி மோசடி செய்ததாக கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மார்ட்டின் மனைவி லீமா ரோசும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது; விசாரணை தொடர்ந்தது.
திடீரென, வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டு, 2022 நவம்பரில் ஆலந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று, மாஜிஸ்திரேட் உத்தரவு
பிறப்பித்தார். அதிர்ச்சியான அமலாக்க துறை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் விசாரித்தனர்.
அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ''குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக கூறிய போலீசார், திடீரென வழக்கை முடித்து வைக்க அறிக்கை கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாஜிஸ்திரேட் அதை நிராகரித்திருக்க வேண்டும்,'' என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன், ''போலீஸ் அறிக்கையை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொண்ட பின், அதை எதிர்த்து வழக்கு தொடர அமலாக்க துறைக்கு தகுதி இல்லை,'' என்றார்.
வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் நோக்கமே, நாட்டின் பொருளாதார நலனை பாதுகாப்பது தான். இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தால், அந்த நோக்கம் வீணாகி விடும். மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மார்ச் 12ல் பணம் சிக்கியது. மார்ச், 2ல் விற்பனை ஒப்பந்தம் போட்டதாக சொல்கின்றனர். ஆனால், முத்திரைத்தாள் விற்றதே மார்ச் 13ம் தேதி தான். எனவே, சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற பணம் என்பது தெளிவாகிறது.
பூர்வாங்க வழக்கை முடித்து வைத்து, 'மணி லாண்டரிங்' வழக்கை தடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர். மணி லாண்டரிங் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பூர்வாங்க வழக்கை முடித்து விட்டால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையிட அமலாக்க துறைக்கு உரிமை உள்ளது. பூர்வாங்க வழக்கில் உள்ள ஆரம்ப முகாந்திரத்தை சுப்ரீம் கோர்ட்டே ஏற்ற பின், போலீசார் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, குற்ற வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கலாம். போலீஸ் அறிக்கையும், அதை ஏற்று மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
***