டில்லி போல தமிழகத்திலும் தாமரை மலரும்: சரத்குமார்
டில்லி போல தமிழகத்திலும் தாமரை மலரும்: சரத்குமார்
ADDED : பிப் 10, 2025 06:33 AM

சென்னை : 'டில்லி போல், தமிழகத்திலும் ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தாமரை மலரும்' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தொன்று தொட்டு இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த சூழலில், பிற்காலத்தில் பிற ஆட்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்தபோது, இங்கு பரவிய இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்திற்கு உரிய அங்கீகாரமும், உரிமையும் வழங்கி, அன்பு பாராட்டி, இன்றளவும் ஒற்றுமையுடன் வாழ்வோர் ஹிந்துக்கள்.
ஆனால், ஹிந்துக்களின் பாரம்பரிய, கலாசார அடையாளங்களை அழிப்பதற்கும், மறைப்பதற்கும், சிலர் இன்று முயற்சித்து வருவது வேதனை அளிக்கிறது. உலக அளவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவை, ஹிந்து நாடு என அங்கீகரிப்பதில் என்ன தவறு இருக்கிறது. பல விருப்ப தெய்வங்களை வணங்கினாலும், வழிபடும் முறை மாறுபட்டாலும், அனைவரும் ஹிந்துக்கள் தான்.
எப்படி அவமதித்தாலும் பொறுத்துக் கொள்வர் என்ற நிலை மாற, அனைவரும் ஓரணியில் குரல் கொடுத்து உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஹிந்துக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் கண்ணெதிரே கண்ட ஹிந்துக்களின் தன்னெழுச்சியும், ஒற்றுமையும் தொடர வேண்டும். டில்லியில், 27 ஆண்டுகளுக்கு பின் தாமரை மலர்ந்திருக்கிறது.
அதுபோல, 58 ஆண்டு கால திராவிட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். அந்த ஒரே இலக்கோடு, நாம் அனைவரும் தீவிரமாக உழைத்திட உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

