ADDED : நவ 05, 2024 02:20 PM

கோவை: கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ., 5) காலை, 11:00 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். 11:30 மணிக்கு பீளமேடு - விளாங்குறிச்சி சாலையில், 'எல்காட்' நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 3.94 ஏக்கர் பரப்பளவில், 114.16 கோடி ரூபாயில், எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) கட்டடத்தை திறந்து வைத்தார்.
பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கபட்ட நில உரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவை வழங்கினார். இந்நிலையில், கோவை மக்கள் வரவேற்பு அளித்தது குறித்து வீடியோ, புகைப்படத்தை சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: “நல்லா இருக்கீங்களா தலைவரே…” எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு அளித்தனர். 4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது! கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.