காற்றழுத்த தாழ்வு பகுதி; 35 மாவட்டங்களில் மழை தொடரும்; வானிலை மையம் அப்டேட்
காற்றழுத்த தாழ்வு பகுதி; 35 மாவட்டங்களில் மழை தொடரும்; வானிலை மையம் அப்டேட்
ADDED : டிச 12, 2024 10:46 AM

சென்னை: தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 35 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.