வங்கக்கடலில் காற்றழுத்தம்; செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழை பெய்யும்
வங்கக்கடலில் காற்றழுத்தம்; செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழை பெய்யும்
ADDED : ஜூலை 15, 2025 06:40 AM

சென்னை; வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடக்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் நோக்கி நகரக்கூடும். அதன்பின் இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி - மின்னலுடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யலாம். கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 10 இடங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.