UPDATED : மார் 10, 2024 01:50 AM
ADDED : மார் 08, 2024 10:59 PM

சென்னை : தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி என தி.மு.க., பங்கிட்டு கொடுத்துள்ளது.
கையெழுத்தானது
மூன்று தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக கேட்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 தொகுதிகளை பெற்றுக் கொள்ள சம்மதித்ததால் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வி.சி.க., தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர். சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும்.
''இரண்டு தனி தொகுதி, ஒரு பொது தொகுதி கேட்டிருந்தோம்; அதற்கு வாய்ப்பில்லை என இரு தனி தொகுதிகள் மட்டும் ஒதுக்கி தந்துள்ளனர். தனி சின்னத்தில் போட்டியிடுவோம். வேட்பாளர்கள் யார் என்பதை கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவு செய்யும். பொது சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்,'' என செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறினார்.
ராஜ்யசபா
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, ம.தி.மு.க., - தி.மு.க., இடையே நான்காம் கட்ட பேச்சு நேற்று நடந்தது. அதில், திருச்சி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி, ம.தி.மு.க., கோரிக்கை வைத்தது. அது தவிர, ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது.வைகோவின் ராஜ்யசபா எம்.பி., பதவி இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது. அதை வைகோ ஏற்றுக் கொண்டார். பேச்சின் முடிவில், மூன்றுக்கு பதில் ஒருதொகுதியை ஏற்க அவர் சம்மதித்ததால் பங்கீடு ஒப்பந்தம் உடனே கையெழுத்தானது.
”நாங்கள் நிரந்தரமாக தி.மு.க.,விற்கு பக்கபலமாக இருப்போம். எந்த தொகுதியில் போட்டி என்பது பின்னர் பேசி முடிவெடுக்கப்படும். தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால், அது குறித்து பேசவில்லை. புதுச்சேரியுடன் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். தொகுதி உடன்பாடு எனக்கு மனநிறைவு தருகிறது” என வைகோ கூறினார்.
காங்கிரசுக்கு இழுபறி
அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில், புதுச்சேரியுடன் சேர்த்து, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், தேனி தொகுதியை தவிர மற்ற, 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போதும் காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கிறது. இது தொடர்பான பேச்சில், காங்கிரஸ் முடிவு எடுக்காமல் இருப்பதால், இழுபறி நீடிக்கிறது. காங்கிரசுக்கு, 9 அல்லது 10 தொகுதிகள் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

