'வாழ்க்கை முறை மாற்றத்தால் நுரையீரல் மரணங்கள் அதிகரிப்பு'
'வாழ்க்கை முறை மாற்றத்தால் நுரையீரல் மரணங்கள் அதிகரிப்பு'
ADDED : ஜூன் 04, 2025 10:38 PM
சென்னை:''நெடுங்காலம் புகை பிடிப்பது போன்ற காரணங்களால், பொதுவான மரணங்களில், நுரையீரல் மரணங்கள், மூன்றாம் இடத்தில் உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, டி.எம்.எஸ்., வளாகத்தில், நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்புமிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில், பொதுவான இறப்புக்கான காரணங்களில், நீடித்த நுரையீரல் அடைப்பு நோய், மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த நோயினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு பின், இதய பாதிப்புகள், நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
முதலில் இதய பாதிப்பு மரணங்கள், பக்கவாத பாதிப்பு மரணங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து நுரையீரல் அடைப்புக்கான மரணங்கள் உள்ளன.
இந்த நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க, நெடுங்காலம் புகை பிடிக்கும் முதியோர், நுரையீரல் தாக்கம் அதிகம் ஏற்படுேவாரை கண்டறிந்து, சரி செய்வதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நுரையீரல் தொற்றிற்கு முக்கிய காரணிகளாக விளங்கும், நெடுங்காலம் புகைப் பிடிக்கும் பழக்கம், காற்று மாசு, தொழில் சார் நோய் பாதிப்பு ஆகியவை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும், கொழுப்பு மிகு கல்லீரல் நோயும், அதிகம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் உலகெங்கும், 30 சதவீத மக்கள், கொழுப்பு மிகு ஈரல் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, களப்பணியாளர்கள் வாயிலாக, கொழுப்பு மிகு கல்லீரல் நோய் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆரம்ப நிலை பரிசோதனை மேற்கொள்வது போன்ற திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.