முதியோரை தாக்கும் நுரையீரல் பாதிப்பு; நிமோனியா தடுப்பூசி போடுவது அவசியம்
முதியோரை தாக்கும் நுரையீரல் பாதிப்பு; நிமோனியா தடுப்பூசி போடுவது அவசியம்
ADDED : நவ 26, 2025 12:24 AM

சென்னை: 'குளிர்கால இருமல், சளி பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், முதியோர், ஆஸ்துமா பாதிப்பு உடையோர், நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், குளிர்கால இருமல், சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அரசு மருத்துவமனை முதல் தனியார் மருத்துவமனைகள் வரை, நோயாளிகள் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது.
குறிப்பாக, நுரையீரல் பாதிப்புள்ள முதியோருக்கு, இக்கட்டான நிலைமையை உருவாக்கும் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறியதாவது:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்கள், சளி, இருமலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் வாயிலாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றின் வாயிலாக பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தற்போதைய காய்ச்சல் ஒரு வாரத்தில் குணமாகக் கூடியது. ஆனால், முதியோருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், ஆஸ்துமா நோயாளிகள், மூச்சு தொந்தரவு இருப்போர், டாக்டர் ஆலோசனைப்படி, நிமோனியா, இன்ப்ளூயன்ஸா தொற்றுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

