UPDATED : நவ 08, 2026 06:03 PM
ADDED : நவ 08, 2026 05:58 PM
ஓசூர்: ஓசூர் அருகே மர்மமான முறையில் செவிலியர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே கொத்துாரை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ, 23. சூளகிரி அருகே தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். பேரண்டப்பள்ளியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடபிரபு, 26. இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இரு மாதத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆறு மாதமாக ஓசூரில், பஸ்தி இந்திரா காந்தி நகரில் இருவரும் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வாயில் நுரை தள்ளிய நிலையில், திவ்யஸ்ரீ உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்ட வெங்கடபிரபு, ஓசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. துாக்கிட்டால் ஏற்படும் காயம் போல் இருப்பதாக, டாக்டர்கள் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவ்யஸ்ரீக்கு வலிப்பு நோய் இருந்ததால், நேற்று முன்தினம் வலிப்பு ஏற்பட்டதில் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஹட்கோ போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. திவ்யஸ்ரீயின் தாய் மஞ்சு புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
