'எம் - சாண்ட்' விற்பனை என்.எல்.சி.,யில் தொடக்கம்
'எம் - சாண்ட்' விற்பனை என்.எல்.சி.,யில் தொடக்கம்
ADDED : மே 27, 2026 07:07 AM
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தயாரிக்கப்படும், 'எம் - சாண்ட்' மணல் விற்பனை பணிகளை, தமிழக கனிமவளத்துறை தொடங்கி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில், மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், நிலக்கரி எடுப்பதற்கான சுரங்க பணிகள் நடக்கின்றன.
இதில் கிடைக்கும் கருங்கல் பாறைகளை பயன்படுத்தி, 'எம் - சாண்ட்' மணல் தயாரிக்கப்படுகிறது. அதை விற்கும் பணிகள், தமிழக அரசின் கனிமவளத்துறை வாயிலாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தயாரிக்கும் எம் - சாண்ட், பொது மக்களுக்கு விற்கப்பட உள்ளது. மொத்த விற்பனை அடிப்படையில், எம் - சாண்ட் வாங்குவதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய இருக்கிறோம்.
தற்போதைய நிலவரப்படி ஒரு டன், 330 ரூபாய் விலையில், எம் - சாண்ட் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு மாதத்துக்கு, 32,000 டன் அளவுக்கு எம் - சாண்ட், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு, ஆற்று மணல் கிடைக்காத நிலையில், எம் - சாண்ட் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதில் தரமான எம் - சாண்ட் எங்கு கிடைக்கும் என்று தேடும் மக்களுக்கு, இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது.
