பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பஸ்சை பறிமுதல் செய்யுங்கள் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பஸ்சை பறிமுதல் செய்யுங்கள் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 04, 2025 11:40 PM
சென்னை:'நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் பஸ்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையின்போது, மாவட்ட கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 93 தானியங்கி குடிநீர் வினியோக மையங்கள் செயல்படுவதாக கூறப்பட்டிருந்தது.
மன்னிப்பு
இதை படித்த சிறப்பு அமர்வு நீதிபதிகள், 'கலெக்டர் தவறான தகவலுடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, பிளாஸ்டிக் பொருட்களுடன், வாகனங்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன' எனக் கூறி, அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், 'இவ்விவகாரத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர். இந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு, திண்டுக்கல் கலெக்டர் எஸ்.சரவணன் ஆஜராகினர்.
அப்போது, நீலகிரி கலெக்டர், உண்மைகளை சரி பார்க்காமல் தவறான தகவலுடன் அறிக்கை தாக்கல் செய்ததற்காக, மன்னிப்பு கோரினார்.
மேலும் அவர் கூறுகையில், ''தானியங்கி குடிநீர் வினியோக மையங்களை பராமரிப்பதில், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறோம். சமூக விரோதிகள் சுவிங்கம், கல் மற்றும் பிற பொருட்களை, தானியங்கி குடிநீர் வினியோக மையங்களில், நாணயம் போடும் பகுதிக்குள் போடுகின்றனர்.
''இவற்றை பழுது நீக்கிய பிறகும், ஒரு சில நேரங்களில் இயந்திரம் செயல்படாமல் போகிறது. இதற்கு மாற்றாக, ஆர்.ஓ., கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.
அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, ''நீலகிரியின் அனைத்து நுழைவாயில்களிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தடையை மீறும் நபர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை, 1,973.75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், சுய உதவி குழுக்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டுஉள்ளன,'' என்றார்.
கருப்பு பட்டியல்
அதைத் தொடர்ந்து, நீலகிரி கலெக்டர் கூறுகையில், ''மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வது சாத்தியமற்றது. அவ்வாறு செய்தால், அது பெரும் போக்குவரத்து நெரிசலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே, பஸ்களில் யாரேனும் பிளாஸ்டிக் வைத்திருப்பதை கண்டறிந்தால், பஸ் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
''அடுத்தடுத்து விதி மீறலில் ஈடுபட்டால், அந்த வாகனத்தை இயக்க அனுமதி மறுக்கப்படும். அதன்பின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அனைத்து பஸ்களிலும் குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட வேண்டும்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், ''நீலகிரி வரும் பஸ்களில் பயணிப்போரிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பஸ்சை பறிமுதல் செய்ய வேண்டும்.
அவற்றின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டதுடன், இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி, வழக்கை தள்ளி வைத்தனர்.