மதுரை - பினாங்கு விமான சேவை; டிச.,21 முதல் இண்டிகோ துவக்குகிறது
மதுரை - பினாங்கு விமான சேவை; டிச.,21 முதல் இண்டிகோ துவக்குகிறது
ADDED : டிச 19, 2024 02:18 AM

மதுரை : மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை வழி மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை டிச.,21 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்குகிறது.
மதுரையில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை உள்ளது. மலேசியா, சார்ஜா, குவைத், அபுதாபி செல்லும் விமான நிறுவனங்கள் இருவழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தாலும் மத்திய விமான அமைச்சகம் அனுமதி வழங்காததால் பிற நாடுகளின் இருவழி சேவை மதுரையில் துவங்கப்படவில்லை. பகல்நேர கஸ்டம்ஸ் விமான தளமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.
அக்.,1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என மத்திய விமான அமைச்சகம் அறிவித்ததை அடுத்து தற்போது மதுரை - சென்னை, சென்னை - மதுரைக்கு இரவு நேர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை டிச.,21 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.
மதுரையிலிருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னை, மதுரைக்கு இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மதுரையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான டிக்கெட் வழங்கப்படுவதோடு பயணிகளின் உடைமைகளை நேரடியாக பினாங்கிற்கு அனுப்பும் வசதியும் கிடைக்கும்.
சிவகங்கையின் காரைக்குடி செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த பலர் பினாங்கில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை - பினாங்கு விமான சேவை அவர்களுக்கும் வசதியாக இருக்கும்
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:
மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும் என்ற அறிவிப்பு வந்ததும் வர்த்தக சங்கம் சார்பில், விமானங்களை இயக்கும் நிறுவன பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தினோம். அதன் பலனாக தற்போது மதுரையிலிருந்து சென்னை வழியாக மலேசியாவின் பினாங்கு மாநிலத்திற்கு தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவங்குகிறது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்கிறது என்றார்.

