ADDED : மார் 13, 2026 06:23 AM
'மேக்கப்'பை விரும்பாத சாரா அர்ஜூன்
'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜூன், தற்போது ஹிந்தியில் 'துரந்தர்' படத்தில் நடித்து பிரபலமானார். மார்ச் 19ல் ரிலீசாகும் இதன் 2ம் பாகத்திலும் நடித்திருக்கும் சாரா, ''நான் எப்போதும் இயற்கையான அழகில் என்னை வெளிப்படுத்தவே விரும்புவேன். படங்களில் நடிக்கும் போது மட்டும் தேவையான அளவு மேக்கப் போடுகிறேன். சாதாரண நேரங்களில் மேக்கப் போடுவதில் ஈடுபாடே கிடையாது'' எனக் கூறியுள்ளார்.
அனிமேஷன் படம் இயக்கும் அனில் ரவிபுடி
சிரஞ்சீவியின் 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தை இயக்கிய அனில் ரவிபுடி, அடுத்து நடிகர் வெங்கடேஷை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். இதற்கடுத்து அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இதற்கான வேலையிலும் இறங்கியுள்ளார் அனில் ரவிபுடி. இதனை 'ஜனநாயகன், டாக்சிக்' படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
மீண்டும் கதை நாயகனாகும் முனீஷ்காந்த்
'மிடில் கிளாஸ்' படத்தில் கதை நாயகனாக நடித்த காமெடி நடிகர் முனீஷ்காந்த், தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் உதவியாளர் அசோக் ராம் இயக்குகிறார். பழமையான கேமராவை மையமாக வைத்து பேண்டசி கலந்த காமெடி படமாக உருவாகிறது.
'கடல் கன்னி' ஆண்ட்ரியா
'துப்பாக்கி முனை' இயக்குனர் தினேஷ் செல்வராஜ் அடுத்து குழந்தைகளுக்கான பேண்டசி கதையாக 'கடல் கன்னி' படத்தை இயக்கியுள்ளார். இதில் கடல்கன்னியாகவும், எழுத்தாளராகவும் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் சுனைனா, முனீஷ்காந்த், பிரித்வி, ஜோசிகா மாயா நடித்துள்ளனர். பல திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்ற இப்படம் விரைவில் ரிலீசாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 10வது படம்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவர் இதுவரை தயாரித்த 9 படங்களில் 'கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட், தாய்கிழவி' ஆகிய படங்களில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். அடுத்து அம்மாமுத்து சூர்யா என்ற புது இயக்குனரின் படத்தை தனது 10வது தயாரிப்பாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
'கர' நீளத்தை குறைக்க முடிவு
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார் என பலர் நடித்துள்ளனர். ஏப்.30ல் ரிலீசாகிறது. படத்தின் முதல் காப்பியை பார்த்த தயாரிப்பாளர், 3 மணிநேரத்திற்கு மேலாக ஓடும் படத்தின் நீளத்தை குறைக்க சொல்லியுள்ளார். இதனால் இரண்டரை மணிநேரமாக பட நீளத்தை குறைக்க இயக்குனர் விக்னேஷ் ராஜா முடிவு செய்துள்ளார்.
சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா
நடிகை நயன்தாரா, 'மூக்குத்தி அம்மன் 2, ஹாய், டாக்சிக், பேட்ரியாட்', தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி, ஹிந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'ஜவான்' படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் 2வது ஹிந்தி படம் இது.
ராஷ்மிகா எச்சரிக்கை
நடிகை ராஷ்மிகா, கன்னட நடிகர் ரக் ஷித் ஷெட்டி இடையே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றது. பின்னர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் ராஷ்மிகா முத்தக்காட்சியில் நடித்ததற்காக ரக் ஷித் கோபமடைந்ததாகவும், நடிப்பதை நிறுத்த சொன்னதாலும் அந்த திருமணம் நின்றதாக ராஷ்மிகாவின் தாயார் பேசியதாக ஆடியோ வைரலாகி சர்ச்சையானது. இதற்கு விளக்கமளித்த ராஷ்மிகா, ''சிறிய பகுதி வேண்டுமென்றே நீக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கியுள்ளனர். தவறான தகவல்களை பரப்பியவர்கள் 24 மணிநேரத்தில் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் '' என எச்சரித்துள்ளார்.
