ADDED : மார் 14, 2026 06:38 AM
செவிலியராக நடிக்கும் கங்கனா
ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் நடித்து வரும் 'பாரத் பாக்கிய விதாதா' படம் 2008ல் மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிறது. அந்த சமயத்தில் மும்பையின் இரு மருத்துவமனைகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அங்கிருந்த செவிலியர்கள் எப்படி அச்சூழலை லாவகமாக கையாண்டனர் என்பதே இதன் கதை. இதில் கங்கனா ரணாவத் செவிலியராக நடிக்கிறார்.
காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்
நடிகர் அர்ஜூன் தாஸ், சமீபகாலமாக ஒருவரை காதலிப்பதாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அது மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி என சொல்லப்பட்ட நிலையில், வேறொருவரை தான் அர்ஜூன் தாஸ் காதலிப்பதாக கூறினர். இந்த நிலையில் அவர் வெளியிட்ட பதிவில், 'ஒருவரை நீங்கள் உயிராக நேசிக்கும்போது, அவரே உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் எப்படித்தான் முன்னோக்கிச் செல்வது' எனப் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் காதல் தோல்வி அடைந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை
கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் 'யூத்' படம் மார்ச் 19ல் ரிலீசாகிறது. இப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் தனுஷ், ''யூத் அடைகிற வெற்றி அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையாவிற்கு தான் சேரும். எவ்வளவு வெற்றி அடைந்தாலும் கென், அவரை மனதில் வைக்க வேண்டும். மறக்க கூடாது. எல்லார்கிட்டையும் எல்லாம் இருக்கும். ஆனால் கொடுக்க மனம் வராது. நட்பை வார்த்தையில் வைக்காமல் மனதில் வைப்பது நல்லது'' என அறிவுரை வழங்கினார்.
100வது படத்தில் முதல் பட நாயகன்
1984ல் மோகன்லாலின் 'பூச்சக்கொரு மூக்குத்தி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரியதர்ஷன். பின்னர் பல மொழிகளில் படங்களை இயக்கினார். ஏப்.10ல் ரிலீசாகும் அக் ஷய் குமாரின் 'பூத் பங்களா' இவரது 98வது படம். அடுத்து ஹிந்தியில் சைப் அலிகான் நடிப்பில் 'ஹைவான்' படத்தை இயக்க உள்ளார். அதன்பின்னர், தான் இயக்கும் 100வது படத்தில் தனது முதல் படத்தில் நடித்த மோகன்லாலை நடிக்க வைக்க விரும்புவதாக பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 15 முதல் படங்களுக்கு சப் டைட்டில் கட்டாயம்
திரைப்படங்களை காது கேளாதவரும், பார்வையற்றோரும் பார்க்கும் வகையில் சில விதிமுறைகளை சென்சார் போர்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மார்ச் 15 முதல் புதிய படங்களில் சப் டைட்டில், ஒலி வடிவில் காட்சிகளை விவரிக்கும் ஆடியோ ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டுமாம். தணிக்கைக்கு சமர்ப்பிக்கும் போதே சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பினால் தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்படுமாம்.
விஜய் ரசிகர்களின் தெய்வீக அன்பு : பிரியங்கா சோப்ரா
2002ல் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பின் பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமானார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''தமிழன் படப்பிடிப்பில் விஜயை பார்க்க நுாற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். விஜய் ரசிகர்கள் காட்டிய அன்பு தெய்வீகமான உணர்வை போல இருந்தது. அப்போது தான் இந்திய ரசிகர்களின் அர்ப்பணிப்பை முதல்முறையாக நேரில் உணர்ந்தேன்'' என்றார்.
அட்லிக்கு சிறப்பு இடமளித்த அல்லு அர்ஜுன்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாதில் 'அல்லு சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை சொந்தமாக திறந்துள்ளார். தியேட்டரில் இடம்பெற்றுள்ள 'வால் ஆப் பேம்' எனப்படும் 'புகழ் சுவர்'-ல் இந்தியாவின் முக்கிய இயக்குனர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழ் இயக்குனர் அட்லியின் படத்தையும் சேர்த்துள்ளார் அல்லு அர்ஜூன். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது அல்லு அர்ஜூனின் 22வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி. அதேநேரம் புகழ் சுவரில் ஷங்கர் படம் இல்லை.
