ADDED : டிச 08, 2024 12:12 PM

சென்னை: 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்' என தகவல் அறியும் உரிமை சட்ட மனுவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தின் திட்ட மதிப்பு, தற்போது 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதன் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் குறித்து, தென்காசியைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இருந்தார்.அதில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது அவரது கேள்வி. அதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். முதற்கட்டமாக ரூ.1,118.35 கோடியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.