ADDED : ஜூலை 05, 2025 11:44 PM
சென்னை:விபத்தில் தன்னை கொல்ல சதி நடந்ததாக கூறிய மதுரை ஆதீனத்தை நேரில் ஆஜராகும்படி போலீசார் அனுப்பிய சம்மனுக்கு, அவரது செயலர் ஆஜராகி, ஏழு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
சென்னை, காட்டாங்கொளத்துாரில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு மே 3ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே, அவரது கார் விபத்துக்குள்ளானது.
தன்னை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாக, மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசினார். போலீசார் விசாரணையில், அப்படி எதுவும் இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், 'மதுரை ஆதீனம் பொய்யான குற்றச்சாட்டு கூறி, இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் அளித்தார்.
இது தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேரில் ஆஜராக இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் செயலர் செல்வகுமார், போலீசார் முன், நேற்று ஆஜரானார்.
பின், அவர் கூறுகையில், ''ஆதீனம் நேரில் பார்த்ததைத் தான் கூறினார். விசாரணைக்கு ஏழு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளோம்,'' என்றார்.

