முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரை புறக்கணிப்பு; தி.மு.க., ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரை புறக்கணிப்பு; தி.மு.க., ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை
ADDED : ஆக 05, 2025 07:08 AM
மதுரை : தி.மு.க., ஆட்சி ஆரம்பித்தது முதல் தற்போது வரை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கான பெருநிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.
கடந்த முறை சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் மதுரையை மையப்படுத்தி எந்த பெரு நிறுவனமும் கொண்டு வரப்படவில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும் முதலீடுகளை செய்வதற்கு ஏற்ப நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் துாத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த மாநாட்டில் துாத்துக்குடி, திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டும் முதலீட்டு மண்டலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரையை எடுத்துக் கொண்டால் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படாத மாவட்டம். ரோடு வசதியுடன் ரயில்வே ஜங்ஷன், விமான நிலையம் உள்ளது. அருகில் துாத்துக்குடி துறைமுகம் உள்ளது. மதுரையின் சிறப்புகளை எடுத்துக் கூறி தொழில்களுக்கான இடவசதியை காண்பித்தால் தானே வெளிநாட்டு முதலீடுகள் குவியும் என்கின்றனர் மதுரை, தென்மாவட்ட தொழில் பிரதிநிதிகள்.
அவர்கள் கூறியதாவது: மதுரை உள்ளூர் திட்டக் குழுமம் (எம்.எல்.பி.ஏ.,) அரசாணை மூலம் முதல் முழுமைத்திட்டம் 1995ல் நடைமுறைக்கு வந்தது. 2வது மாஸ்டர் பிளான் 2021 முதல் 2041க்காக தயார் செய்துஅரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தற்போது 2024 முதல் 2044 என தலைப்பை மாற்றியுள்ளனர். திட்ட வரைவாக்கம் இன்று வரை ஆலோசனை நிலையில் உள்ளதே தவிர, முடிவுக்கு வரவில்லை.
மாஸ்டர் பிளான் திட்டம் தொடர்பாக 15 நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த கூட்டத்தில் கூட தொழிற்சாலைகளுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு கேட்டுள்ளோம். ஏற்கனவே 2.0 என இருந்ததை தற்போது 4.33 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை எப்படி வகைப்படுத்தப் போகின்றனர், எங்கெங்கு தொழிற்சாலை ஏரியா இருக்கும் என குறிப்பிடவில்லை. தேர்வு செய்யும் இடங்களை தமிழக அரசின் சிப்காட் பெருநிறுவன திட்டம் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை மூலமாக மேம்படுத்தி கொடுத்தால் தானே தொழில் நிறுவனங்கள் அந்த இடத்தை வாங்கி தொழில் துவங்க முடியும்.
மதுரைக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து முதலீட்டாளர் மண்டல மாநாட்டை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும். ஒரு பெருநிறுவனம் அமையும் போது அதைச் சார்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறுதொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி பெறும். அதன்மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்றனர்.