கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
ADDED : ஜன 28, 2025 12:27 AM

மதுரை : 'தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.
'தவறினால், தமிழக அரசே அகற்றிவிட்டு, அதற்குரிய செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம் வசூலிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கதிரவன் என்பவர் தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க., மதுரை மேற்கு 3ம் பகுதி மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு சில அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.
அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு துவக்க விழாவை ஒட்டி கொடிக்கம்பம் நட அனுமதி கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளித்தோம்.
உதவி கோட்டப் பொறியாளர், 'விபத்து மற்றும் பாதுகாப்பு காரணம் கருதி அனுமதி வழங்குவதில்லை. போலீசார், வருவாய்த் துறையை அணுகி அனுமதி பெறலாம்,' என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அதுபோல, மதுரையைச் சேர்ந்த சித்தன், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அத்திப்பட்டி சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நிறுவியது தொடர்பாக 77 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என டி.ஜி.பி., அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கட்சிகளின் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களின் போது கொடியேற்றப்படுகிறது. அப்போது நடக்கும் விழாக்களால் போக்குவரத்திற்கு இடையூறு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
கொடிக்கம்பங்களின் உயரத்தை அடுத்தடுத்து உயர்த்துவதில், கட்சிகள், அமைப்புகளிடையே போட்டி நிலவுகிறது. பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்களை நிரந்தரமாக நிறுவ, அனுமதிக்க போலீஸ், வருவாய்த் துறைக்கு சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. பொதுக்கூட்டம், விழாக்களின்போது தற்காலிக அடிப்படையில் அனுமதி அளிக்கலாம்.
அதற்கு வாடகை வசூலிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தமிழக அரசுக்கு, இந்த நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது:
தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் 12 வாரங்களில் அகற்றப்பட வேண்டும்.
தவறினால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 2 வாரம் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில் நடவடிக்கை எடுக்கப்படாவிடில் கொடிக்கம்பங்களை அரசே அகற்றிவிட்டு, அதற்குரிய செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம் வசூலிக்க வேண்டும்
அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்களை நிரந்தரமாக நிறுவ அரசு அனுமதியளிக்கக் கூடாது
கட்சிகள், அமைப்புகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்கள் நிறுவலாம்
தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், நிகழ்ச்சிகளின்போது பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிக அடிப்படையில் நிறுவ சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம் வாடகையை அரசு வசூலித்து அனுமதியளிக்கலாம். அதற்காக பள்ளம் தோண்டியதை அக்கட்சிகள், அமைப்புகள் ஏற்கனவே இருந்தது போல, சீரமைத்துத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.