ADDED : அக் 01, 2025 06:46 AM

மதுரை: மதுரை மண்டல பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.28 கோடி லாபம் ஈட்டியுள்ளது' என மதுரை பொதுமேலாளர் லோகநாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவன வெள்ளி விழா இன்று (அக்.,1) நடப்பதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 1 லட்சம் அலைபேசி டவர்களை திறந்து வைத்தார். இதன்மூலம் ஆத்ம நிர்பார் கொள்கைபடி 90 சதவீத டவர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் மதுரை மண்டல வணிகபகுதி ரூ.27.85 கோடி லாபத்துடன் ரூ.192.67 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 2026 நிதியாண்டுக்குள் ரூ.291 கோடி வருவாய் ஈட்டுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம்.
தற்போது பி.எஸ்.என்.எல்.,க்கு 40 சதவீதம் மட்டுமே பேட்டரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதனை மார்ச் 2026க்குள் முழுமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
மதுரை மண்டல வணிகப்பகுதியில் மட்டும் 4.2 லட்சம் அலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது 4ஜி மூலம் இயங்கும் டவர்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் மூலம் அதிவேக இணைய சேவையை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர் என்றார். பொருளாதார ஆலோசகர் வாவேர்துரை, துணை மேலாளர்கள் மோகன்தாஸ், துரைசாமி, பீனா பாணிக்கர், கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.