மதுரை அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தினமலர் செய்தியால் தீர்வு காண வழக்கு
மதுரை அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தினமலர் செய்தியால் தீர்வு காண வழக்கு
ADDED : அக் 24, 2024 07:32 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தேங்குவது குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு தீர்வு காண தாக்கலான வழக்கில் அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அரசு மருத்துவமனையில் கழிவுநீர் செல்வதற்கான வழித்தடம் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்குகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என 'தினமலர்' நாளிதழில் ஆக.,10ல் செய்தி வெளியானது. இங்கு 45 ஆண்டுகளுக்கு முன் பாதாளச்சாக்கடை அமைக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவியாக மருத்துவமனையில் உறவினர்கள் தங்குகின்றனர். அதற்கேற்ப பாதாள சாக்கடையை மேம்படுத்தவில்லை.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டுகளில் துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்கின்றனர். அவர்களின் பெயர், சுத்தம் செய்த நேரத்தை குறிப்பிட்டு கையெழுத்திட்டு மக்கள் அறியும்வகையில் அறிவிப்பு ஒட்டப்படுகிறது. அதை மருத்துவ கண்காணிப்பாளர் தினமும் பார்வையிட்டு கையெழுத்திடுகிறார். அதை மதுரை அரசு மருத்துவமனையில் பின்பற்ற வேண்டும்.
மழைக்காலம் துவங்கியுள்ளது. கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் மருத்துவமனையின் நிலைமை மோசமாகிவிடும். கழிவுநீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வாக முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோயாளிகள், உடன் வருவோருக்கு காத்திருப்பு அறைகள், கழிப்பறை வசதிகள் செய்யக்கோரி சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: டீன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் நாளை (அக்., 24) தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.