'மதுரை ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் சூட்டக்கூடாது'
'மதுரை ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் சூட்டக்கூடாது'
UPDATED : ஜன 19, 2024 06:46 AM
ADDED : ஜன 19, 2024 01:24 AM

சென்னை:''ஜல்லிக்கட்டை கொண்டாட, தி.மு.க.,வுக்கு யோக்கியதை கிடையாது. பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகனாக எடுத்துக் கொள்ள முடியாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டு வீரத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு. மத்தியில் தி.மு.க., கூட்டாட்சியில் இருந்தபோது, ஜல்லிக்கட்டை தடை செய்யும் வகையில், அவர்கள் நடவடிக்கை இருந்தது. எனவே, ஜல்லிக்கட்டை கொண்டாட, தி.மு.க.,வுக்கு யோக்கியதை கிடையாது.
பன்னீர்செல்வம், நான் தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார். பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகனாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அப்போதைக்கு மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அன்று முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தி.மு.க., ஊழலின் சின்னம். மதுரையில் திறக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வைக்காமல், ராஜராஜ சோழன், கரிகாலன், பல்லவ மன்னர் பெயர் சூட்டலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதை ஏற்க முடியாது.
எங்கு பார்த்தாலும், முதல்வர் தனது அப்பா பெயரை வைக்கிறார். ஜல்லிக்கட்டு விழாவை கட்சி விழாவாக நடத்தி உள்ளனர். பொது விழாவாக நடத்தவில்லை.
கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் செலவில், பஸ் நிலையம் கட்ட திட்டமிட்டோம். நாங்கள் திட்டமிட்டது போல கட்டப்பட்டிருந்தால், மக்களுக்கு பிரச்னைஏற்பட்டிருக்காது.
ஆனால், தி.மு.க., அரசு மாதிரியை மாற்றி, அவர்கள் கட்சி சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டினர்.
முகப்பில் கருணாநிதி சிலை வைத்துள்ளனர். திறக்கும்போது முன்னேற்பாடு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
அவசரப்பட்டு திறந்ததால், மூன்று அமைச்சர்கள்,' ஷிப்ட்' முறையில் அங்கு பணிபுரிகின்றனர். மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

