மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்: மத்திய அமைச்சர் முருகன் பேச்சு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்: மத்திய அமைச்சர் முருகன் பேச்சு
ADDED : ஆக 31, 2025 04:02 AM

மதுரை : ''மதுரையில், ஹிந்து அமைப்புகளால் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, தி.மு.க., உள்ளிட்ட ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கான சவால்,'' என, ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்து, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''ஹிந்து முன்னணி யினர், திருப்பரங்குன்றம் மலை உரிமையை மீட்பதற்காக, தொடர்ந்து வழக்குகளை சந்திக்கின்றனர். மதுரையில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திக் காட்டினோம்.
''தி.மு.க.,வுக்கும், தி.க.,வுக்கும், ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கும் சவாலாக முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. தமிழகத்தின் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தின் வாயிலாக ஹிந்துக்களின் எழுச்சியை காட்ட வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கட்சி அலுவலகத்தில் தி.மு.க., நடத்துகிறது. அதுபோலவே, அறிவாலயத்தில் சிறிய பிள்ளையார் வைத்து வழிபட வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, விழாவில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்தோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கும் அழைப்பு கொடுத்தோம். அவர்கள் வர தயாராக இல்லை.
தன் கட்சியிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என தேர்தல் நேரத்தில் ஹிந்து ஓட்டுகளுக்காக நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டாராம். இதையெல்லாம் ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.
ஹிந்துக்களுடன் இருக்கும் ஒரே கட்சி பா.ஜ., மட்டும் தான். தமிழகத்தில் அராஜகம் நடக்கிறது. விநாயகர் மீது கை வைப்பவர்கள் காணாமல் போயுள்ளனர்.
தேர்தல் நெருங்குகிறது; நாம் அரசியல் கட்சி இல்லை யென்றாலும், ஹிந்துக்களுக்கு யார் ஆதரவாக உள்ளனர் என ஆராய்ந்து, ஹிந்து விரோதியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற ஒற்று மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.