ஒரே வீட்டில் 35 நாய்கள்; தெருவில் நடமாட முடியவில்லை என மதுரை மக்கள் கொந்தளிப்பு
ஒரே வீட்டில் 35 நாய்கள்; தெருவில் நடமாட முடியவில்லை என மதுரை மக்கள் கொந்தளிப்பு
ADDED : பிப் 20, 2025 01:30 PM

மதுரை: மதுரை மாடக்குளம் பகுதியில் ஒரே நபர் 35 நாய் வளர்ப்பதால் தங்களுக்கு
பாதுகாப்பில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மதுரை மாடக்குளம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவு இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரோட்டில் நடந்து செல்லவும் முடியவில்லை; இரு சக்கர வாகனங்களில் செல்லவும் முடியவில்லை; தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிப்பதாக ஊர்மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து மாடக்குளம் பகுதி மக்கள் கூறியதாவது: தெருவில் 10 மணிக்கு மேல் எந்த இருசக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தெரு நாய்கள் விரட்டுகின்றது. ஒரே ஒருவர் மட்டும் 35 முதல் 40 தெரு நாய்களை வளர்க்கிறார். தெரு நாய்களுக்கு சாப்பாடு போடலாம். குறை சொல்லவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?
நாய்கள் துரத்தும் போது எப்படி தெருவில் செல்ல முடியும். மாடக்குளம் முதல் பழங்காநத்தம் மெயின் ரோடு வரை தெரு நாய்கள் அதிகம் மக்களை துரத்துகிறது. நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்தோம். அவர்கள் மாநகராட்சியிடம் புகார் அளிக்க சொல்கிறார்கள். மாநகராட்சி தான் தீர்வு காண முடியும் என சொல்கிறார்கள்.
போராட்டம் நடத்தினால் போலீசார் எங்களை சமாதானம் செய்து வீட்டிற்கு செல்கிறீர்களா அல்லது கைது செய்யவா என மிரட்டுகிறார்கள். நாய்களை மாநகராட்சியினர் பிடித்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

