ADDED : மே 17, 2025 02:23 AM
சென்னை:'மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை ரயில் நிலையத்தில் 347.47 கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் 2022ம் ஆண்டு டிசம்பரில் துவக்கப்பட்டன.
பார்சல் அலுவலகம், நடை மேம்பாலங்கள், காத்திருப்பு அறைகள், பிரமாண்ட வாகன நிறுத்தம், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள மதுரை பெரியார் பஸ் நிலையம் செல்ல சுரங்கப்பாதை ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல் ராமேஸ்வரம் ரயில் நிலையம் 90.20 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படுகிறது. இங்கு மல்டி லெவல் பார்கிங், நடைமேடை விரிவாக்கம், காத்திருப்பு அறை, லிப்ட், எஸ்கலேட்டர், சுற்றுலா பயணியருக்கான சொகுசு ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ராமேஸ்வரம், மதுரை ரயில் நிலையங்களில் பயணியருக்கான அனைத்து விதமான அடிப்படை வசதிகள், பார்சல் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகின்றன. தற்போது 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. புதுப்பிக்கப்படும் இரு ரயில் நிலையங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,' என்றனர்.