மதுரை ரவுடி ராமர் பாண்டி கொடூர கொலை; கரூர் அருகே பழிக்குப்பழியாக தலை சிதைப்பு
மதுரை ரவுடி ராமர் பாண்டி கொடூர கொலை; கரூர் அருகே பழிக்குப்பழியாக தலை சிதைப்பு
ADDED : பிப் 20, 2024 06:55 AM

மதுரை: மதுரை பிரபல ரவுடி ராமர் பாண்டி 33, கரூர் அருகே பழிக்குப்பழியாக தலை சிதைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி. இவர் மீது 6 கொலைகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு டூவீலரில் நண்பர் கார்த்திக் என்ற முத்துராஜாவுடன் திரும்பி வந்தபோது அரவக்குறிச்சி தடா கோயில் அருகே காரில் வந்த கும்பல் வழிமறித்து வெட்டியது.
தப்பி ஓடிய ராமர் பாண்டி கீழே விழுந்தார். அவரை வெட்டிக்கொன்றதோடு, தலையை கொடூரமாக சிதைத்துவிட்டு தப்பிச்சென்றனர். காயமுற்ற கார்த்திக் கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்
போலீசார் கூறியதாவது: அனுப்பானடியில் சில ரவுடிகள் தங்களுக்கென 'குரூப்' ஆரம்பித்து செயல்பட்டு வந்தனர். ராமர் பாண்டி கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 2012ல் தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியவர்கள் மீது தன் 'பவரை' காட்ட சிந்தாமணி போலீஸ் அவுட்போஸ்ட் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 7 பேர் இறந்தனர்.
இதில் முதல் குற்றவாளியாக ராமர் பாண்டி சேர்க்கப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக அனுப்பானடி - தெப்பக்குளம் ரோட்டில் ராமர் பாண்டி தரப்பினர் காரில் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கடந்தாண்டு அனுப்பானடியில் 'பாபி' கார்த்திக் என்பவரை கொலை செய்தது உட்பட 6 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, மிரட்டல் என 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு ஸ்டேஷன்களில் உள்ளன. பசுபதி பாண்டியன் ஆதரவாளராக இருந்தவர், அவர் மறைவுக்கு பின் தனது பாதுகாப்பிற்காக 'தேவேந்திர குல மக்கள் சபை' என்ற கட்சியை துவக்கினார்.
2012ல் பெட்ரோல் குண்டு வீசி 7 பேரை கொலை செய்த வழக்கு பாதுகாப்பு கருதி மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று காலை ஆஜராகிவிட்டு திரும்பியபோதுதான் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அனுப்பானடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

