UPDATED : ஜூலை 07, 2025 08:13 AM
ADDED : ஜூலை 07, 2025 04:16 AM

துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இன்று காலை 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது.
இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
கும்பாபிஷே கத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதை முன்னிட்டு, கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷே க நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக, 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.