sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'மகாபாரதம் - கதையல்ல நிஜம்': ஆதாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா

/

 'மகாபாரதம் - கதையல்ல நிஜம்': ஆதாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா

 'மகாபாரதம் - கதையல்ல நிஜம்': ஆதாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா

 'மகாபாரதம் - கதையல்ல நிஜம்': ஆதாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா

17


UPDATED : நவ 13, 2025 11:04 AM

ADDED : நவ 13, 2025 12:34 AM

Google News

17

UPDATED : நவ 13, 2025 11:04 AM ADDED : நவ 13, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என கூறப்படும் நிலையில், சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு நிறுவன இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஒரு சுடுமண் சிற்பம் குறித்து எழுதிய கட்டுரை, தற்போது இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:

உங்களின் கட்டுரை பற்றி சொல்லுங்கள்?

கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஹாங்காங்கில் உள்ள ஒரு கலைப்பொருள் விற்பனையாளர் ஜெர்மி பைன், சுவரில் மாட்டும் சுடுமண்ணாலான அலங்கார புடைப்பு சிற்பத்தின் புகைப்படத்தை, மின்னஞ்சலில் அனுப்பி, அதன் முக்கியத்துவம் பற்றி கேட்டிருந்தார். அதுகுறித்த கட்டுரைதான் அப்போது பிரபலமானது.

அந்த சிற்பத்தின் சிறப்பம்சம் என்ன?

ஜெர்மி பைன் அந்த சிற்பத்தை பல ஆண்டுகளுக்கு முன், நேபாளத்தில் வாங்கியதாக தெரிவித்தார். 7.5 செ.மீ., உயரம், 9 செ.மீ., அகலம் உள்ள அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஒருவரும், அருகில் ஒருவர் கையை நீட்டி ஏதோ சொல்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தேரின் சக்கரம், ஆரங்களுடன் உள்ளது. தேரோட்டியின் அருகில் இருப்பவர், இரண்டு அம்பராத்துாணிகள் எனும் அம்புக்கூடைகளுடன் மகாபாரதக் காட்சியை முன்னிறுத்துகிறது.

இது போன்ற சித்திரங்களும், சிற்பங்களும் நிறைய கோவில்களில் உள்ளன; காலண்டர்களில் கூட உள்ளனவே. அதில் என்ன சுவாரஸ்யம்?

அந்த சிற்பத்தின் பின்புறத்தில், ஒரு ஓட்டையிட்டு, அதிலிருந்து கனிமத்தை எடுத்து, ஆக்ஸ்போர்ட் ஆய்வகத்துக்கு அனுப்பி, 'தெர்மோ லுாமினென்சென்ஸ்' எனும் ஒளி வெப்பவியல் ஆய்வு செய்துள்ளனர். அதன் காலம், பொ.ஆ.மு., 1,600 முதல் 300 வரை என அந்த ஆய்வகம் வரையறுத்துள்ளது. அதாவது, தற்போதிலிருந்து 2,300 முதல் 3,600 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம்.

அதில் ஆச்சர்யப்பட என்ன உள்ளது?

அந்த சிற்பம் கிடைத்த இடம் நேபாளம். அதில் உள்ள உருவங்கள் வரையறுப்பது பாரதப் போரை; அதன் காலம், 3,600 ஆண்டுகள். அது, சிந்துவெளி நாகரிகத்தின் இறுதி காலம்.

அதாவது, மகாபாரத கதை, ஒரு சிற்பமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றால், அது குறித்த தகவல்கள் படிப்படியாக பல செவி வழியாக காலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் சிந்துவெளி மக்கள், மகாபாரதத்தை அறிந்திருக்க வேண்டும்.

எப்படி சொல்கிறீர்கள்?

சிற்பம் கிடைத்த இடத்தின் அருகில் தான், மகாபாரதம் குறிப்பிடும் இந்திரபிரஸ்தா எனும் டில்லி, பன்பிரஸ்தா எனும் பானிபட், சோன்பிரஸ்தா எனும் சோனிபட், தில்பிரஸ்தா எனும் தில்பட், வியாக்பிரஸ்தா எனும் பாக்பட் ஆகியவை உள்ளன.

அதனால், மகாபாரத சிற்பம் என்பதை உறுதி செய்ய முடியுமா?

இல்லை. மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணர் வருவார். அவர், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிப்பார். அர்ஜுனன் இரண்டு அம்பராத்துாணிகளை வைத்திருப்பார். மேலும், அர்ஜுனனின் தேரில் பூட்டிய குதிரைகளுக்கு சைப்யன், சுக்ரீவன், மேகபுஷ்பன், பலஹகன் என்ற பெயர்கள் உண்டு.

மேலும், யுத்தத்தின் போது தன் உறவினர்களை நோக்கி, அம்பு எய்த மாட்டேன் என கூறுவதும், அதைத் தொடர்ந்து பகவத் கீதை துவங்குவதும் அறிவோம். அதற்கு ஆதாரமாக, இந்த சிற்பத்தில் இரண்டு அம்பராத்துாணிகள் இருந்தாலும், அதை வைத்திருக்கும் நபர் வில்லேந்தவில்லை; அவர் கையை நீட்டி உள்ளார்.

குதிரைகள் இழுக்கப்படுவதால், பின் முழங்கால்கள் மடிந்து, நிலை நிறுத்துகின்றன. இதனால், இந்த சிற்பம் மகாபாரத காட்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சரி... அவர்கள் அர்ஜுனனும், கிருஷ்ணரும் என்பதை உறுதி செய்ய, வேறு என்ன ஆதாரம் உள்ளது?

பொதுவாக, தாடியுடன் கூடிய ஹரப்பா மனிதனின் சிற்பத்தில், நெற்றியில் ஒரு பட்டம் கட்டப்பட்டிருக்கும். அதாவது, மன்னருக்கான அடையாளமாக அது கருதப்படுகிறது. இந்த சிற்பத்திலும், ஒரு நெற்றிப் பட்டம் உள்ளது. அதனால், அவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் என அறியலாம்.

இது போன்ற சிற்பமோ, தேரோ சிந்துவெளியில் கிடைக்கவில்லையே?

அது பழைய கதை. மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் சஞ்சய்குமார் மஞ்சுள், உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செய்த அகழாய்வில், இதே போன்ற ஆரமுள்ள சக்கரத்துடன் சிறிய தேரை கண்டெடுத்தார். இதன் காலம், 3,800 முதல் 4,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என கூறப்பட்டது. இது போன்ற தேரைப் பற்றிய குறிப்பு, ரிக் வேதத்திலும் உள்ளது.

அதனால் ஆச்சர்யப்பட்ட நான், அந்த கட்டுரையை எழுதினேன். அதை, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கடந்த 2019, நவம்பர் 15ல் நடந்த இந்திய கலை மற்றும் வரலாற்று மாநாட்டிலும் வாசித்து, ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். அந்த கட்டுரை தான், தற்போது இணையத்தில் வலம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர்






      Dinamalar
      Follow us