ADDED : செப் 21, 2024 01:13 AM
சென்னை:சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில், மாணவர்கள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் போது, மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக, பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சென்னை விமான நிலையத்தில், கடந்த 7ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருந்தபடி, காணொளி காட்சி வாயிலாக நீதிபதி சிவசுப்பிரமணியம் முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மகாவிஷ்ணு ஜாமின் கோரிய மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவரின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்ற காவலை, மேலும், 14 நாட்களுக்கு நீட்டித்தார்.