புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
ADDED : மே 30, 2026 02:07 AM

சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த சங்கர் ஜிவால், கடந்தாண்டு ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, செப்டம்பர் மாதமே புதிய டி.ஜி.பி.,யை நியமித்து இருக்க வேண்டும்.
ஆனால், அப்போதைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, புதிய டி.ஜி.பி.,யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தியது. பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரலில் சட்டசபை தேர்தலின்போது, வெங்கடராமன் மாற்றப்பட்டு, டி.ஜி.பி.,யாக சந்தீப்ராய் ரத்தோட், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில், யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடந்தது.
இதில், காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பி., ராஜிவ்குமார், தற்போது மத்திய அரசு பணியில் உள்ள, எல்லை பாதுகாப்பு படை சிறப்பு இயக்குநர் ஜெனரல் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சட்டம் -- ஒழுங்கு டி.ஜி.பி.,யாக உள்ள சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, மகேஷ்குமார் அகர்வால் புதிய டி.ஜி.பி.,யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகேஷ்குமார் அகர்வால், 54, பஞ்சாப் மாநி லத்தைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டு, 22 வயதில், தமிழக கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2021ல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். 10 ஆண்டுகள், சி.பி.ஐ., அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.
