தீப திருவிழாவில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு கெடுபிடி ‘மாஜி’ அமைச்சர் வேலு கண்டனம்
தீப திருவிழாவில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு கெடுபிடி ‘மாஜி’ அமைச்சர் வேலு கண்டனம்
UPDATED : நவ 17, 2026 07:21 PM
ADDED : நவ 17, 2026 07:18 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீப திருவிழாவில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு கெடுபிடி செய்வதை கண்டித்து முன்னாள் தி.மு.க., அமைச்சர் வேலு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை தீப திருவிழா மொத்தம், 17 நாட்கள் நடக்கிறது. இதில், உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆண்டு தோறும் பெருமளவு கலந்து கொண்டு தங்களது ஆன்மீக கடமையை செலுத்தி வருகிறார்கள். ஏழாம் நாள் நடக்கும் தேர் திருவிழா, 10ம் நாளம் மஹா தீப திருவிழா மற்றும் பவுர்ணமி ஆகிய நாட்களில்தான் போலீஸ் கட்டுப்பாடுகள், போக்குவரத்து மாற்றம் கோவிலின் அருகே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு முதல் திருவிழா அன்றே காவல்துறையின் கட்டுப்பாடுகள் அதிகமுள்ளதாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எனக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக பக்தர்கள் செல்லும், வடக்கு அம்மணியம்மன் கோபுரம் வழியே செல்ல அனுமதிக்காமல், மேற்கு கோபுரம் வழியாக செல்லுங்கள் என கூறி பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.
உள்ளூர் பொதுமக்களை முறையாக பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆன்மீக கடமையாற்றிட அனுமதி அளித்திட வேண்டும் ஆன்மீக கடமையாற்ற வரும் பொதுமக்களுக்கு போலீசார் கண்ணியமாக பாதுகாப்பு அளித்திட வேண்டும். தீப திருவிழா ஏற்பாடுகள் முறையாக செய்யாமல், இந்த மாவட்டத்தில் பொறுப்ப அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஆகியோர் ஒரு கூட்டத்தை மட்டும் நடத்தி, அதை ‘ரீல்ஸாக’ போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
மாவட்ட நிர்வாகம் உலகெங்கும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், 14 கி.மீ., கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஊர் திரும்பும்போது குறைந்தபட்சம், 5 முதல், 7 கி.மீ துாரம் வரை நடக்கும் சூழல் உள்ளது. அதை தவிர்க்க திருவண்ணாமலை நகருக்குள், 1 கி.மீ துாரத்துக்குள் ஆட்டோக்கள் மற்றும் மினி பஸ்களை அனுமதிக்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாநகர எல்லையில் வெளியூர் போலீசாரை வைத்து, தடுப்புகள் அமைத்து மூடிவிடுகிறார்கள். அதனால், உள்ளூர் மக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு, ஒவ்வொரு தெருக்களிலும் தடுப்பு அமைத்து மூடிவிடுகிறார்கள். பத்திரிகையாளர்களை கூட போலீசார் அனுமதிப்பதில்லை. தண்ணீர் வண்டி, பால் வண்டி, மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
