ADDED : மே 26, 2025 02:50 AM

சென்னை : துணை முதல்வர் உதயநிதி, பட்டியலின நிர்வாகிகளை அவமதித்ததாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலையை, உதயநிதி திறந்து வைத்தார். அதன்பின், பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்ட மேடையில், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., துணை செயலர் -அரையப்பட்டி மதியழகன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரிய தலைவர் இளையராஜா ஆகியோருக்கு இருக்கை மறுக்கப்பட்டுள்ளது.
தன் கட்சியில் பலமான பொறுப்பில் இருக்கும் பட்டியலின நிர்வாகிகளை நிற்க வைக்கும் அநீதியை அனுமதித்தாரா உதயநிதி? மாமன்னன் படத்தில் சொன்னதை போல, 'உட்காருங்க' என உதயநிதி ஏன் சொல்லவில்லை?
இரண்டு மாதங்களுக்கு முன், இதே 'தாட்கோ' இளையராஜாவை அமர வைத்து, 'போட்டோ ஷுட்' எடுத்தார் உதயநிதி. விளம்பர மோகம் கொண்ட பொய் முகத்திரையை அந்த நிகழ்வு கிழித்தெறிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.